இரண்டு மங்கோலியப் பெண்களை பாலியல் கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் ஒரு காவல் அதிகாரிக்கு எதிரான வழக்குகள், மலேசிய காவல்துறை ஒருபோதும் அதன் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் குற்றவியல் நடத்தையை பாதுகாக்காது என்பதை நிரூபிக்கிறது.
இரண்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்ட பின்னர், அந்த இன்ஸ்ப்¦க்டர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியை குற்றஞ்சாட்டுமாறு சட்டத்துறை அலுவலகத்திடமிருந்து உத்தரவைப் பெற்றுள்ளதாகக் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் கூறினார். ஆள்கடத்தல் தடுப்பு சட்டம் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு சட்டம் 2007 (ATIPSOM) மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
ATIPSOM பிரிவு 13(f)-ன் கீழ், அதிகார அத்துமீறல் மூலம் பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்திற்காக ஆள்களை கடத்தும் குற்றங்களுக்காக அந்த அதிகாரி நேற்று கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2 (f) மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு அதே சட்டத்தின் பிரிவு 354 ஆகிய குற்றச்சாட்டு அடிப்படையில் இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் இரண்டாவது குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் பதவி மற்றும் நிலையைப் பொருட்படுத்தாமல் காவல் துறை எப்போதும் சட்டத்தை நிலைநிறுத்துகிறது என்பதை இந்த தீர்க்கமான நடவடிக்கை காட்டுகிறது என்று அவர் கூறினார்.
காவல் துறை அதன் சொந்த பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வதில் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் சமூக குழுக்கள் மீது ஹுசிர் வருத்தம் தெரிவித்தார்.
விசாரணையின் கீழ் உள்ள எந்தவொரு வழக்குகளையும் கையாள்வது குறித்து எதிர்மறையான கருத்து மற்றும் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்ட முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியான மற்றும் வளமான சமுதாயத்தை நோக்கி ஒரு தேசத்தை உருவாக்க ஒரு பொறுப்பான சமூகமாக மாறுங்கள்,” என்று ஹுசிர் கூறினார்.
முன்னதாக, ஏப்ரல் 11 அன்று, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இரண்டு மங்கோலியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள காவல் அதிகாரி கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பாதிக்கப்பட்ட 20 மற்றும் 37 வயதுடைய மங்கோலியப் பெண்களை தங்கும் விடுதியில் இருந்து காவல்துறையினர் மீட்டதை தொடர்ந்து 30 வயதுடைய அந்நபர் கைது செய்யப்பட்டார்.