40 ஆண்டுகள் பழமையான மலாக்கா ரமாடா தங்கும்விடுதி மூடப்படுகிறது

கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையான மலாக்கா ரமாடா ஹோட்டல் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, ஏப்ரல் 28 தேதியிட்ட கடிதத்தில், ரமாடா தங்கும்விடுதியின் இயக்குனர் கையெழுத்திட்டு, தேசிய தங்கும்விடுதி தொழிலாளர்கள், பார்கள் மற்றும் உணவகங்களின் சங்கத்திற்கு அனுப்பப்பட்டது.

அந்த கடிதத்தின்படி, அத்தங்கும்விடுதி அடுத்த ஜூன் 30 வரை மட்டுமே இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஜனவரி 2020 முதல் கோவிட்-19 தொற்று நெருக்கடி மற்றும் 2020 மார்ச் 18 முதல் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் காரணமாக, தங்கும்விடுதி (ஹோட்டல்) தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் நாங்களும் விதிவிலக்கல்ல”.

“இந்த நெருக்கடி காரணமாக, தங்கும்விடுதியை மீண்டும் தொடங்குவது இனி சாத்தியமில்லை.”

“ஆதலால், உரிமையாளர், வணிகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதை உங்களுக்குத் தெரிவிப்பதில் வருத்தப்படுகிறோம்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்தங்கும்விடுதியின் உரிமையாளர் ஊழியர்களுக்கு இரண்டு மாத பணிநீக்க அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.

தங்கும்விடுதி ஊழியர்களின் வேலைவாய்ப்பு விதிமுறைகளின் அடிப்படையில், பணிநீக்கம் செய்யப்படுவதன் இழப்பீடு அவர்களுக்கு செலுத்தப்படும்.