நாடாளுமன்றம் 2 வாரங்களுக்கு அமர வேண்டும் என்கிறது பாக்காத்தான்

ஏப்ரல் 29 முதல் பொருளாதாரத்தின் பல துறைகள் முழுமையாக இயங்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தொடர்ந்து, நாடாளுமன்றத்தையும் குறைந்தது இரண்டு வாரங்களாவது அமர அனுமதிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் கேட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், பாராளுமன்றம் நீண்ட நாட்கள் அமர அனுமதிக்க, விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பக்காத்தான் கூறியது.

“பொதுநலம், வேலைவாய்ப்பு போன்ற மக்களின் பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தின் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. அரசாங்க நிர்வாகம், மற்றும் அதன் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், பெர்ச்சத்து தலைவர் முகமட் சாபு; மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூறினர்.

மே 18 அன்று நாடாளுமன்றம் அமர உள்ளது. வழக்கத்தில் இருந்து வேறுபட்டு, அது ஒரு நாள் மட்டுமே நீடிக்கும்.
ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்துவது உட்பட, நாடாளுமன்ற அமர்வை நீண்ட நேரம் நடத்த வேண்டும் என்று பக்காத்தான் எம்.பி.க்கள் கோரியுள்ளனார்.

எவ்வாறாயினும், பிரதம மந்திரி துறை அமைச்சர் தக்கியுதீன் ஹாசன், இந்த திட்டம் குறுகிய சிந்தனையுடையது என்றும், அது அரசாங்கம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

மே 18 அமர்வில் சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பும் அரசாங்கத்திற்கு மிக முக்கியமான பிரச்சினையாகும் என்றார்.

பிரதம மந்திரி துறையின் மற்றொரு அமைச்சர் முஸ்தபா முகமது, ஒரு மெய்நிகர் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு உள்கட்டமைப்பு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், அதிகமான கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வருவதை அடுத்து, அரசாங்கத்தின் தளர்வும், அனுமதிகளும் வரவேற்கத்தக்கது. ஆனால் அது மிக எச்சரிக்கையாக கையாளப்பட வேண்டும் என்று பாக்காத்தான் கூறியது.

“பல வணிக உரிமையாளர்கள் வருமானத்தை இழந்துள்ளதும், பலர் தங்களின் வேலையை இழக்க நேரிடுவதும், கோவிட்-19 தேசிய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரிதாக உள்ளது”.

“பார் கவுன்சில் மற்றும் வணிக சங்கங்களும், சட்டத்தில் திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்களை உருவாக்கி பிரச்சினையை தீர்க்கவும், பொருளாதாரத் துறை சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யவும் அழைப்பு விடுத்துள்ளன” என்று அவர்கள் தெரிவித்தனர்.