கிட்டத்தட்ட அனைத்து பொருளாதார துறைகளும் மே 4 முதல் திறக்கப்படும்

பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் மே 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பிரதம மந்திரி முகிதீன் யாசின் இன்று சிறப்பு செய்தியில் அறிவித்தார்.

“உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தரவு மற்றும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பின்பற்றி, கடுமையான சுகாதார செயற்பாட்டை அமல்படுத்துவதன் மூலம் பொருளாதாரத் துறைகளை கவனமாக மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.”

“மே 4, 2020 முதல், பொருளாதாரம் மற்றும் வணிக நடவடிக்கைகளின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளும், அதிகாரிகள் நிர்ணயித்த நிபந்தனைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

இருப்பினும், இன்னும் சில தொழில்களும் வணிகங்களும் செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் முகிதீன் கூறினார்.

“இது பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் நெரிசலை உள்ளடக்கிய வணிக செயல்பாடுகளாகும். அங்கு கூடல் இடைவெளியைக் கட்டுப்படுத்துவது கடினம்.”

“இவற்றில் திரையரங்குகள், பாடல் மையங்கள், பாத மசாஜ் மையங்கள், பொழுதுபோக்கு மையங்கள், இரவு கிளப்புகள், கேளிக்கை பூங்காக்கள், ரமலான் பஜார், திருவிழா விற்பனைகள் மற்றும் அனைத்து வகையான மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவை அடங்கும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, முகிதீன் தனது உரையில், நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு (பி.கே.பி.பி) உத்தரவை (Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) அரசாங்கம் செயல்படுத்தும் என்று அறிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு அல்லது WHO நிர்ணயித்த ஆறு நிபந்தனைகளை மலேசியா பூர்த்தி செய்துள்ளதே இதற்கு காரணம் என்று முகிதீன் விளக்கினார்.

“முதல் மற்றும் இரண்டாவது அணுகுமுறைகள் பலனளித்துள்ளன. இப்போது மூன்றாவது அணுகுமுறையில் இறங்கத் தயாராக உள்ளோம். இது நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் எச்சரிக்கையுடன் திறப்பதாகும். இதை அரசாங்கம் பி.கே.பி.பி-யின் மூலம் செயல்படுத்தும்” என்று அவர் கூறினார்.

பி.கே.பி.பி-யின் கீழ், ஏராளமான மக்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைத் தவிர, பெரும்பாலான பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று முகிதீன் கூறினார்.

இருப்பினும் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.டி) அதிக கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் உள்ள பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.