பிரதமர்: திங்கள் முதல் வெளியே மெதுவோட்டம் ஓடலாம், பூப்பந்து விளையாடலாம்

இந்த திங்கட்கிழமை தொடங்கி, மக்கள் மீண்டும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கலாம் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்தார். ஆனால், அந்நடவடிக்கைகள் உடல் தொடர்பு மற்றும் பொதுக்கூட்டங்களில் ஈடுபடாத அளவு இருக்க வேண்டும் என்றார்.

இந்த அனுமதியில் மெதுவோட்டம் (ஜாகிங்), சைக்கிளோட்டம், கோல்ஃப் மற்றும் 10 பேருக்கு மேல் இல்லாத சிறிய குழு ஓட்டம் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் அடங்கும்.

இருப்பினும், கூட்டங்கள் மற்றும் உடல் ரீதியிலான தொடர்பு ஏற்படக்கூடிய விளையாட்டுகள் மற்றும் நோய்த்தொற்றின் அபாயங்களை அதிகரிக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. இதில் காற்பந்து, ரக்பி மற்றும் அனைத்து உட்புற, விளையாட்டு அரங்கங்களில் நடைபெரும் விளையாட்டு நிகழ்வுகளும் அடங்கும்.

பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்ட போதிலும், வரும் மாதங்களில் கோவிட்-19 நோய்த்தொற்றில் எந்த நாடும் பூஜ்ஜியத்தை எட்டுவது சாத்தியமில்லை என்ற உண்மையை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முகிதீன் கூறினார்.

எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ள, பொது சுகாதார சேவையின் திறனை மேம்படுத்த வேண்டும்.

எனவே, கூடல் இடைவெளி, கைகளை கழுவுதல், பொது இடங்களில் முகக்கவரி அணிவது, அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகுவது என்று தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனிடையே, விருந்துகள், திறந்த இல்ல உபசரிப்புகள், பொது நோம்புத்திறப்பு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் துறை மாதாந்திர கூட்டங்கள் மற்றும் அனைத்து வகையான தொடக்க விழா நிகழ்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை உள்ளடக்கிய சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை என்று முகிதீன் இன்று தனது சிறப்பு செய்தியில் தெரிவித்தார்.

மத அணிவகுப்புகள், வெள்ளிக்கிழமை தொழுகைகள் மற்றும் மசூதிகள், வழிபாட்டு இல்லங்களில் உள்ள அனைத்து சபை கூடல் நடவடிக்கைகள் போன்ற மத நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது.

கூடுதலாக, ஊர்களில் அல்லது வேறு இடங்களில் சிக்கித் தவித்தபின் வீடு திரும்புவது, அல்லது வேலைக்குச் சென்று வீடு திரும்பும் நோக்கத்தைத் தவிர மாநில எல்லை தாண்டிய பயணமும் அனுமதிக்கப்படாது.

நோம்புப் பெருநாள் விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு பயணம் செய்யவும் அனுமதி இல்லை.

தற்போது, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களும் இன்னும் திறக்கப்படாது என்றார் முகிதீன்.