ERL மே 4 முதல் சேவையைத் தொடங்குகிறது

நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி) விதிமுறைகளின் கீழ் பெரும்பாலான வணிகங்களை மீண்டும் திறக்க முடியும் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்ததைத் தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு (ஈ.ஆர்.எல்)/Express Rail Link Sdn Bhd (ERL), மே 4 முதல் வரையறுக்கப்பட்ட சேவை அட்டவணையை அறிமுகப்படுத்தும்.

KLIA எக்ஸ்பிரஸ் மற்றும் KLIA டிரான்சிட் ஆகியவையும் மே 4 முதல் தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அதன் சேவையை வழங்கும்.

“வார நாட்களில் பரபரப்பான மணிநேரங்களில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இந்த ரயில் பயணிக்கும். மேலும் பரபரப்பு அல்லாத மணிநேரங்களில், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ரயில் பயணிக்கும்” என்று ஈ.ஆர்.எல். இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரமலான் மாதத்தில் பரபரப்பான மணிநேரம் என்பது, மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை என்று தீர்மானிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நேரங்களில், பெரும்பாலான பொது போக்குவரத்து பயனர்கள் நோம்பு திறக்க வீடு திரும்புவார்கள்.

இந்த வரையறுக்கப்பட்ட சேவை அட்டவணை ஒரு மாதத்திற்கு நடைமுறையில் இருக்கும், மேலும் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

இதனிடையே, அனைத்து பயணிகளிடமும் உடல் வெப்பநிலை சோதனைகளை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சு ஈ.ஆர்.எல். நடத்துனரைக் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தது.

“38⁰C அல்லது அதற்கு மேற்பட்ட உடல் வெப்பநிலை கொண்ட எந்தவொரு பயணிகளும் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். கூடுதலாக, அனைத்து பயணிகளும் ரயில் சேவையைப் பயன்படுத்தும் போது எல்லா நேரங்களிலும் முகக்கவரியை அணியவும், ஒருவருக்கொருவர் பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

முழுமையான ரயில் அட்டவணை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தகவல்களுக்கு, www.KLIAekspres.com அல்லது Facebook KLIA Express ஐப் பார்வையிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.