பெர்சத்துவை மீண்டும் பாக்காத்தானில் ஏற்க தயார் – அன்வார் இப்ராஹிம்

பெர்சத்து கட்சி மீண்டும் பாக்காத்தான் ஹராப்பானில் சேர விரும்பினால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம்.

இருப்பினும், பாக்காத்தான் தலைமையின் கீழ் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட மாற்றத்தின் திட்டங்களை பெர்சத்து பின்பற்ற வேண்டும் என்று அன்வார் நினைவுபடுத்தினார்.

“இது பெர்சத்து எடுக்க வேண்டிய ஒரு முடிவு. இப்போது பிளவுபட்ட இரண்டு பெர்சத்து கட்சிகள் உள்ளன. அதனால், ஒரே கட்சியாக இருந்து இது குறித்து அவர்கள் முடிவெடுக்க வேண்டும். பாக்காத்தான் திறந்த மனதுடன் தான் உள்ளது.”

“ஆனால் பாக்காத்தான் தலைமையின் கீழ், ஊழலை நிராகரிப்பது போன்ற அனைத்து சீர்திருத்தங்கள் உள்ளிட்ட மாற்றத்தின் திட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பானுடன் மீண்டும் இணையுமாறு பெர்சத்துவை வலியுறுத்தி முக்ரிஸ் நேற்று அளித்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அன்வார் இதனைக் கூறினார்.