மலாக்கா சட்டமன்ற சபாநாயகராக அம்னோ தலைவர் நியமிப்பு

மலாக்கா சட்டமன்றம் – தேசிய கூட்டணி (பி.என்) இன்று எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இல்லாமல் மாநில சட்டமன்ற கூட்டத்தை மீண்டும் தொடங்கியது. பின்னர், புதிய சபாநாயகராக மலாக்கா அம்னோ தலைவரும், மலேசிய முன்னாள் அம்னோ செயலாளருமான அப்துல் ரவூப் யூசோ நியமிக்கப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

முன்னதாக இன்று காலை தொடங்கிய மலாக்கா சட்டமன்றம், கூச்சலிலும் குழப்பத்திலும் முடிவடைந்தது.

காலை 9.30 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தை ஓமார் ஜபார் நடத்த முற்பட்டபோது அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லை என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்களும் விவாதங்களும் எழுந்தன.

விவாதங்களைத் தொடர்ந்து, ஓமார் ஜபார் சட்டமன்றக் கூட்டத்தை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைத்தார்.

சட்டமன்றத்தை ஒத்திவைத்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இது நடந்துள்ளது.

ஒரு தனி அறையில் இருந்து நேரடியாக கூட்டத்தைப் பற்றி செய்தி தொகுக்க அனுமதிக்கப்பட்ட ஒரு அரசாங்க ஊடக நிருபரின் கூற்றுப்படி, முதலில் ரிம் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் கசாலி முகமட் கூட்டத்தை தொடங்கி, பின் ஒரு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பு தொடங்கப்பட்டது என்றார்.

“ரவூப் புதிய சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டதற்கு ஆதரவாக மொத்தம் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்,” என்று நிருபர் கூறினார்.

அரசாங்க ஊடகங்கள் மட்டுமே இன்று அங்கே நேரடி செய்தி தொகுக்க அனுமதிக்கப்பட்டன, மற்ற தனியார் நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.