மலாக்காவின் புதிய சட்டமன்ற சபாநாயகராக அம்னோ தலைவர் அப்துல் ரவூப் யூசோவின் நியமனத்தை பாக்காத்தான் அங்கீகரிக்க மறுத்துள்ளது.
பாக்காத்தனைப் பொருத்தவரை, ஒமார் ஜாஃபர் இன்னும் முறையான சட்டமன்ற சபாநாயகராகவே இருக்கிறார் என்றார் டாக்டர் வோங் ஃபோர்ட் பின் (பெம்பன்-டிஏபி).
“அவர்கள் செய்வது சட்டப்பூர்வமற்றது, செல்லுபடியற்றது” என்று இன்று ரவூப்பின் நியமனம் குறித்து மலேசியாகினி கருத்து கேட்ட போது துணை சபாநாயகராக இருந்த அவர் தெரிவித்தார்.
எந்தவொரு சட்டமன்ற உறுப்பினராகவும் இல்லாத ரவூப் (Rauf), பாக்காத்தன் உறுப்பினர்களின் வருகைபதிவு இல்லாமலே இன்று நடந்த வாக்கெடுப்பில் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரவுப்பை நியமிக்கும் திட்டத்தை மொத்தம் 16 தேசிய கூட்டணி (பி.என்) சட்டமன்றங்கள் ஆதரித்தன. அவர்கள் கசாலி முகமட்டை (ரிம்-அம்னோ) அவர்களின் புதிய துணை சபாநாயகராக தேர்வு செய்தனர்.
முன்னதாக இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய மலாக்கா சட்டமன்ற கூட்டத்தை ஓமார் ஜபார் நடத்த முற்பட்டபோது அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லை என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்களும் விவாதங்களும் எழுந்தன.
விவாதங்களைத் தொடர்ந்து ஓமார் ஜபார் சட்டமன்றக் கூட்டத்தை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைத்தார். சட்டமன்றத்தை ஒத்திவைத்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இந்த வாக்களிப்பு நடந்துள்ளது.
“சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்வதெல்லாம் ஒத்திகை மட்டுமே.”
“மலாக்கா மாநில சட்டமன்ற விதிகளின்படி, ஓமார் இன்னும் சபாநாயகராகவே இருக்கிறார்.”
“அடுத்த கூட்டத்தை மறுசீரமைக்க நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று வோங் கூறினார்.