செத்தியா ஆலாம் குழுமம் எஸ்ஓபி மீறல் காரணமாக இல்லை

கடந்த வாரம் ஏற்பட்ட புதிய கோவிட்-19 பாதிப்பு, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ், இயக்க நடைமுறைகளை (SOP) மீறியதன் விளைவாக இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

மாறாக, SOP-க்கு முதலாளிகள் இணங்கியதால் தான் சிலாங்கூரின் செத்தியா ஆலாமில் ஒரு கட்டுமான இடத்தில் ஒரு புதிய குழுமம் கண்டறியப்பட்டதாக இஸ்மாயில் கூறினார்.

“செத்தியா ஆலாமில் உள்ள கட்டுமான தளங்கள் SOP-க்கு இணங்காமல் இல்லை. அவர்கள் உண்மையில் SOP-யை பின்பற்றுகின்றனர். அவர்கள் தொழிலாளர்களை சோதனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் (தொழிலாளர்கள் மத்தியில்) நேர்மறையான பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.”

“தொற்று, வேலையின் போது ஏற்படவில்லை. ஆனால் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அது கண்டறியப்பட்டது” என்று கோவிட்-19 நிலைமை குறித்த தினசரி செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

மே 9 அன்று 12 வெளிநாட்டு தொழிலாளர்கள் கோவிட்-19 தொற்றுக்கு சாதகமாகக் கண்டறியப்பட்ட பின்னர் அக்கட்டுமான தளத்தின் குழுமம் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

“நெகேரி செம்பிலனில் பெடாஸ் எனும் இடத்தில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்களின் குழுமமும் இப்படித்தான்” என்று இஸ்மாயில் கூறினார்.

“அங்கும் தொற்று தொழிற்சாலையிலிருந்து வரவில்லை, ஆனால் வெளியே இருந்து வந்ததாகும்” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மருத்துவமனையின் சுகாதார ஊழியர்களுக்கும் இதேதான் நடந்தது, என்றார்.

“மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததன் விளைவாக ஊழியர்கள் பாதிக்கப்படவில்லை, ஆனால் வெளியில் இருந்து வந்த தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று இஸ்மாயில் கூறுகிறார்.

“உதாரணமாக, ஒரு மருத்துவ அதிகாரி ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர் பாதிக்கப்பட்டார், அவர் பின்னர் மருத்துவமனையில் உள்ள மற்றவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தியுள்ளார்”, என்றார்.

இதற்கிடையில், செத்தியா ஆலாமில் உள்ள கட்டுமான தளங்களும், பெடாஸில் உள்ள தொழிற்சாலையும், மற்றும் கடந்த வாரம் கண்டறியப்பட்ட பிற குழுமங்களிலும் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூரின் ஜாலான் அம்பாங்கில் உள்ள மற்றொரு கட்டுமானத் தளமும் செராஸில் உள்ள ஒரு பேரங்காடி வளாகமும் இதில் அடங்கும், என்றார்.