முக்ரிஸ் ஆதரவாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறது பெரிக்காத்தான்

முகரிஸ் மகாதீரின் தலைமையை ஆதரிக்கும் பெர்சத்து பிரதிநிதிகளை ஈர்க்க முயற்சிப்பதன் மூலம் தேசிய கூட்டணி (பி.என்.) கெடா மாநில சட்டசபையில் தனது நிலையை வலுப்படுத்த முயற்சிக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“பெர்சத்து கட்சியும் இரண்டு அணிகளாக பிளவுபட்டு, பாக்காத்தானை ஆதரிக்கும் ஒரு குழு, பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான பிஎன் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு குழு என இருப்பதை நாங்கள் அறிவோம்.”

“சிடாம் மற்றும் லூனாஸ் சட்டமன்றத்திற்குப் பிறகு, பெர்சத்துவில் இருந்து மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பாக்காத்தானை விட்டு விலகுவார்கள் என்று பாஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது.”

“இது கெடா பி.என். அரசாங்கத்தின் உருவாக்கத்தை வலுப்படுத்தும். இதனால் பெரும்பான்மையான மாநில சட்டமன்ற இடங்களுக்கு அதிகாரம் அளிக்கும்” என்று கெடாவின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அறிந்த ஒரு மாநில பாஸ் உள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிடாம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ மற்றும் லூனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் பி.கே.ஆரை விட்டு வெளியேறுவதாக அறிவித்தனர்.

அந்த அறிவிப்புடன், கெடா பாக்காத்தான் இப்போது மாநில சட்டசபையில் 17 இடங்களையும், பி.என். 19 இடங்களுடன் பெரும்பான்மையையும் பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த நிலை பலவீனமாகவே உள்ளது. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பாக்காத்தான் முகாமிலிருந்து வெளியேறினால், மாநில அரசு மீண்டும் மாறும்.

டாக்டர் மகாதிர் முகமது குழுவின் எதிர்ப்பைத் தொடர்ந்து பெர்சத்து உள் பூசலை சந்தித்து வருகிறது. மகாதீரின் மகனான முக்ரிஸ், பெர்சத்து தேர்தலில், கட்சியின் தலைவர் பதவிக்காக முகிதீனுக்கு சவால் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், புதிய மந்திரி புசாராக, ஜெனெரி சட்டமன்ற உறுப்பினர் முகமட் சனுசி முகமட் நோரை நியமிக்க பாஸ் முன்மொழிந்ததாக அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது.