பேராக் சட்டமன்றம் – சித்தியாவான் சட்டமன்ற உறுப்பினர் ங்ஙே கூ ஹாம் இன்று பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள அவர், நீண்ட உரை நிகழ்த்திய பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது உரையில், நல்ல சட்டம் மற்றும் நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஒரு புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பது அப்பதவி காலியானால் மட்டுமே நடைபெற முடியும் என்றும், ஏழு நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்றார்.
“இது அச்சுறுத்தலின் கீழ் செய்யப்படக்கூடாது,” என்று அவர் கூறினார். மந்திரி புசார் பைசல் அஸுமு அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்துவதற்காக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை தொடங்கும் முயற்சியை அவர் சுட்டிக்காட்டினார்.
மந்திரி புசார் கொண்டு வரும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறி பைசால் அவ்வாறு செய்ய முயன்றார். பின்னர் அவர் தன்னை ஆதரிக்கும் 34 சட்டமன்ற உறுப்பினர்களையும் எழுந்து நின்று தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, பல மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ங்ஙேவை வெளியேறச் சொல்ல முயன்றனர். ஆனால் அவர் அவ்வாறு செய்ய மறுத்து, அதைச் சரியாகச் செய்ய விரும்புவதாகக் கூறினார்.
இது அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே வாக்குவாததிற்கு வழிவகுத்தது. எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பின்னர் ங்ஙேவை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினர்.
மாநில சட்டமன்றத்தை ஒத்திவைப்பதாக அறிவித்து, ங்ஙே தனது உரையை முடித்தார். ஆனால் பைசால் முதலில் தான் கொண்டு வரும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறினார்.
ங்ஙே வெளியேறிய பிறகு, எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் சபையை விட்டு வெளியேறத் தொடங்கினர். ஆனால் பைசால் தொடர்ந்து சுங்கை மானிக் சட்டமன்ற உறுப்பினர் ஜைனோல் பட்ஸி பஹாருதீனை இடைக்கால சபாநாயகராக நியமித்தார்.