கெடா மாநிலத்தில் பாஸ் கட்சிக்கு பெரும்பான்மை என அறிவிப்பு

புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய கூட்டணிக்கு எளிதான பெரும்பான்மை இருப்பதாக கெடா பாஸ் கட்சி அறிவித்துள்ளது.

இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஸ் தேர்தல் இயக்குநர் முகமட் சனுசி முகமட் நோர், கெடாவில் உள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

பெர்சத்துவைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 23 சட்டமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸின் தலைமை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

“23 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கெடா மந்திரி புசாராக இருக்கும் முக்ரிஸின் தலைமை மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். நான் குறிப்பிட்டது 15 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், பி.என்.-ஐ சேர்ந்த இருவர் மற்றும் இன்று பிற்பகல் கட்சியை விட்டு வெளியேறிய இரண்டு முன்னாள் பி.கே.ஆர். உறுப்பினர்கள் மற்றும் நான்கு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.”

“நம்பிக்கையை இழந்தவுடன், கெடா மாநில அரசு உடனடியாக களைந்தது; கெடா பாக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்தது.”

“எனவே, இன்று 23 சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேருடன் உடன்பாடு கொண்டு, பி.என். அரசாங்கத்தின் சார்பாக ஒரு புதிய கெடா மாநில அரசாங்கத்தை உருவாக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சானுசியை கெடாவின் மந்திரி புசாராக நியமிக்க கெடா பாஸ் பரிந்துரைத்துள்ளது என்பதாகத் தெரிகிறது.