நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) கீழ் அமைக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு (SOP) பொது மக்கள் இணங்கத் தவறினால் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி) மீண்டும் அமல்படுத்தப்படலாம்.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பி.கே.பி.பி.யின் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பேரங்காடிகளுக்கு கொண்டு செல்வது உட்பட ஒத்துழையாமை குறித்து ஏராளமான புகாரகள் வந்துள்ளன என்றார்.
“நான் இங்கு வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், சிபிபி-யை தளர்த்தும் போது, வெளியிடப்பட்ட ஒவ்வொரு விதிகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இல்லையேல், இது கோவிட் -19 இன் நேர்மறை எண்ணிக்கையை மேலும் உயர்த்தக்கூடும்.”
“எனவே, பி.கே.பி.பி. அப்படியே இருக்காது என்று எச்சரிக்க விரும்புகிறேன், அது இறுக்கப்படலாம்.”
“நிறைய பேர் இணங்காத நிலையில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.) மீண்டும் அமல்படுத்தப்படலாம். பி.கே.பி. 1, 2, 3 போன்று மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.