மே 18 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் நேரத்தை குறைப்பதற்கான முயற்சி, முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணிக்கு (பிஎன்) பெரும்பான்மை இல்லை என்பதைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தங்கள் இருக்கைகளை இடைவெளி கொண்டு அமைத்துள்ளதால் கோவிட்-19 பாதிப்பை நியாயப்படுத்த முடியாது என்று பி.கே.ஆர் தலைவரான அன்வார் கூறினார்.
“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளதாக அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் இன்று காலை ஒரு நேரடி முகநூல் ஒளிபரப்பு வழியாக கூறினார்.
திங்களன்று நடைபெறும் நாடாளுமன்ற சபை பேரரசரின் அரச உத்தரவை மட்டுமே கேட்கும் என்ற சமீபத்திய முடிவு குறித்து அன்வார் கருத்து தெரிவித்தார்.
முன்னதாக, சபாநாயகர் முகமட் ஆரிப் முகமட் யூசோப், முகிதீனிடமிருந்து ஒரு கடிதம் வந்ததாகக் கூறினார். அதில், காலை 10 மணிக்கு அரச உத்தரவு முடிந்த பின்னர் கூட்டம் ஏதும் இருக்காது என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அன்வார், தங்களுக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து பி.என் நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்றார்.
“தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் நிலைப்பாடு குறித்து கேள்விக்குறியாய் உள்ளனர். அமைச்சர் பதவி அல்லது ஜி.எல்.சி பதவி கிடைக்கும் என்று நம்புகின்றனர். இல்லையேல் கட்சி தாவ தயாராக உள்ளனர். இறுதியில் அரசியல் உலகம் தவளைகளைப் போன்றாகி விட்டது. இங்கு நெறிகளுக்கும் கொள்கைகளுக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது,” என்று அவர் கூறினார்.
வரவிருக்கும் தேர்தல்களில், கொள்கைகளை கடைபிடிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் அவர் மக்களுக்கு நினைவுபடுத்தினார்.
மே 18 அமர்வில் என்ன நடக்கும் என்று ஒரு நெட்டிசனிடம் கேட்டதற்கு, அன்வார், “அரச ஆணைக்கு மதிகப்பு அளிக்க வேண்டும்”, என்றார்.
“பேரரசர் வருகிறார், எனவே கட்சியைப் பொருட்படுத்தாமல் நாம் அவ¦ருக்கு மதிப்பளிக்க வேண்டும், மரியாதை இருக்க வேண்டும், அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்ற அரச நிறுவனத்தை மதிக்க வேண்டும். “அதைத்தவிர, எதுவும் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார்.