‘என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்’ – இரண்டாவது ஆடியோ பதிவு வெளியானது

பாக்காத்தானை விட்டு வெளியேறும் முன், பெர்சத்துவின் உச்ச மன்ற கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது ஆடியோ பதிவு டாக்டர் மகாதிர் முகமது சார்பு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமரின் குரலை ஒத்திருந்த அந்த ஆடியோவில், தான் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப பதவி விலகுவதிலிருந்து அவரைத் தடுக்க வேண்டாம் என்று கூட்டத்தை கேட்டுகொண்டுள்ளார்.

“தயவுசெய்து என்னை கட்டாயப்படுத்த வேண்டாம். எனது கொள்கைகளுக்கு எதிரான எதையும் செய்ய என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்,” என்றார்.

“நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். நான் பதவி விலகுவதாகச் சொல்லி இருக்கிறேன். பதவி விலகுவேன்.”

கூட்டத்தில் பேசியதைப் போலவே பதிவின் உள்ளடக்கங்களும் ஒத்திருப்பதாக மகாதீரின் பலமான ஆதரவாளரும் பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினருமான காதிர் ஜாசின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பதிவின் செல்லுபடியை தீர்மானிப்பதில் அவர் ஒரு நிபுணர் அல்ல என்று பத்திரிகையாளர் கூறினார்.

மகாதிருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அப்பதிவு உண்மையானது என்பதை உறுதிப்படுத்தியது.

மலேசியாகினி மற்ற பெர்சத்து உறுப்பினர்களிடமிருந்து கருத்துகளைப் பெற முயற்சிக்கிறது.

முன்னதாக வெளியிடப்பட்ட முதல் ஆடியோ பதிவில், முகிதீன் யாசின் குரலை ஒத்திருந்த ஒரு நபர், பெர்சத்து தொடர்ந்து பாக்காத்தானில் இருக்க வேண்டுமா இல்லையா எனும் முடிவையும், பாக்காத்தான் கூட்டணியில் பெர்சத்துவின் நிலைப்பாட்டை தீர்மானிப்பதற்கான நம்பிக்கையையும் மகாதீருக்கு வழங்குமாறு கூட்டத்திற்கு கூறுவதைக் கேட்க முடிந்தது.