கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரீசா ஆஜிசை 1MDB நிதிகளுடன் இணைக்கப்பட்ட RM 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 5 பண மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று விடுவித்தது.
அரசு தரப்பும் குற்றம்சாட்டப்பட்டவரும் ஒரு உடன்பாட்டை எட்டியதை தொடர்ந்து, நீதிபதி அஸ்மான் அகமட் இந்த முடிவை எடுத்தார்.
ஐந்து பண மோசடி தொடர்பாக, மில்லியன் கணக்கான அரசாங்க பணத்தை திருப்பித் தருவதாக அரசு தரப்புடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்துடன் இன்று நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இருப்பினும், ரிசா இந்த ஒப்பந்தத்தை பின்பற்றத் தவறினால், குற்றச்சாட்டை மீண்டும் நிலைநிறுத்தி வழக்கை மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வர அரசு தரப்புக்கு உரிமை உண்டு.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும் அரசு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாடு குறித்து இன்று காலை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் டிபிபி கோபால் ஸ்ரீ ராம் வாசித்த அறிக்கையின் நகலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி, ரெட் கிரானைட் பிக்சர்ஸ் உரிமையாளரான நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிசா, 43, ஐந்து பண மோசடி வழக்கில் தான் குற்றவாளி அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
முதல் குற்றச்சாட்டு, ‘வோல்ஃப் ஆஃப் தி வோல் ஸ்ட்ரீட்’ (Wolf of The Wall Street) திரைப்படத்தின் அந்த தயாரிப்பாளர், பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து, சுவிட்சர்லாந்தின் ஆர்.பி.எஸ். கவுட்ஸில் (RBS Coutts, Switzerland) உள்ள குட் ஸ்டார் லிமிடெட் (Good Star Limited) நிறுவனத்தின் வங்கி கணக்கு எண் 11116073-ல் இருந்து, ரெட் கிரானைட் புரொடக்ஷன்ஸ் இன்க் (Red Granite Productions Inc.) நிறுவனத்திற்கு சொந்தமான வங்கி கணக்கு எண் 123248291 சிட்டி நேஷனல் வங்கி, லாஸ் ஏஞ்சல்ஸுக்கு (City National Bank, Los Angeles) ஒரு பரிவர்த்தனை மூலம் மொத்தம் 1,173,104 அமெரிக்க டாலரை அவர் வருமானமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 12 முதல் மே 12 வரை சிட்டி நேஷனல் வங்கி, லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியாவில் 1MDB நிதியில் இருந்து அந்தப் பணம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
9 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பந்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டு, செப்டம்பர் 10, 2012 மற்றும் அக்டோபர் 10, 2012 இடையே அதே கணக்கிலிருந்து அதே வங்கியில் இருந்து பணம் பரிமாற்றம் செய்ததாக ரிசா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மூன்றாவது மற்றும் நான்காவது குற்றச்சாட்டுகள், 133 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 60 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பந்தப்பட்ட குற்றத்திற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பி.எஸ்.ஐ எஸ்.ஏ. லுகானோ, சுவிட்சர்லாந்தில் (BSI SA, Lugano, Switzerland) அமைந்துள்ள அபார் இன்வெஸ்ட்மென்ட் பி.ஜே.எஸ் லிமிடெட் (Aabar Investment PJS Limited) நிறுவனத்திற்கு சொந்தமான வங்கி கணக்கு எண் 81134378ல் இருந்து, ரெட் கிரானைட் கேபிடல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான பிஎஸ்ஐ பேங்க் லிமிடெட் சிங்கப்பூர், வங்கி கணக்கு எண் 6C02250Aக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது.
ஐந்தாவது குற்றச்சாட்டு, ரோஸ்மா மன்சோரின் முந்தைய திருமணத்தின் மகனான ரிசா மீது நவம்பர் 14, 2012 அன்று 45 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM5 மில்லியன் அபராதம் அல்லது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.