நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், அதன் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றம் குறித்து எதிர்க்கட்சி கூட்டணி தங்கள் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது.
இத்தகைய நடவடிக்கை சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயல்பட வேண்டிய நாடாளுமன்ற நிறுவனத்தில், தலையீடுகள் உள்ளன என்ற கருத்துக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறினர்.
“மே 13 முதல் நடைமுறைக்கு வரும் செயலாளரின் மாற்றம் குறித்த அறிவிப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைகிறோம். நாடாளுமன்றம் கூடுவதற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன,” என்று எதிர்க்கட்சியினர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் பி.கே.ஆர் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அன்வார் இப்ராஹிம் கையெழுத்திட்டார்; அமானாவின் தலைவர் முகமட் சாபு; டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங்; பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமது; மற்றும் வாரிசான் தலைவர் முகமட் ஷாஃபி அப்தால் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் சபையின் செயலாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிடுவான் ரஹ்மத்தின் நிலை குறித்த அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் துறையின் நிஜாம் மைடின் பச்சா மைடின், நேற்று முதல் ரிடுவானுக்கு பதிலாக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார் நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப்.
முகிதீன் யாசின் மீது டாக்டர் மகாதிர் முகமட் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானம் உட்பட, ரிதுவானை மாற்றுவதற்கு காரணங்களாக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
அன்வார், முகமட், மகாதீர், லிம் மற்றும் முகமட் ஷாஃபி ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில், இந்த முறை முழு நாடாளுமன்ற அமர்வு இல்லாத போதிலும், மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளைத் தொடர்வோம் என்றுள்ளனர்.
“நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் தூணாக இருக்க வேண்டும், மக்களின் குரலுக்கான பிரதிநிதியாகச் செயல்பட வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.
எவ்வாறாயினும், கோவிட்-19 ஆபத்து என்ற அடிப்படையில் அரச உத்தரவுகளை மட்டுமே கேட்க வேண்டும் என்று அவர்கள் நாடாளுமன்றத்தை வலியுறுத்துவது வருந்தத்தக்கது மற்றும் ஏமாற்றமளிக்கிறது என்றும் கூறினர்.
“மலேசிய நாடாளுமன்றத்தின் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றில் ஒரு முழு கூட்டம் இல்லாமல் நாடாளுமன்றம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.”
“எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்கொள்ள பிரதமர் மறுத்துள்ளதாக இந்நடவடிக்கையை மக்கள் பார்ப்பார்கள்,” என்று அவர் கூறினார்.