இன்றைய கற்பித்தல் துறையில் ஒரு புதிய நடைமுறையான இயங்கலை அல்லது ஆன்லைன் கற்பித்தல் மற்றும் ‘வீட்டு அடிப்படையிலான கற்றல்’ ஆகியவற்றில் திறன்களைப் பெறுமாறு நாட்டின் ஆசிரியர்களுக்கு பிரதமர் முகிதீன் யாசின் அழைப்பு விடுத்தார். தற்போது கோவிட்-19 பாதிப்பால் பள்ளியில் கல்வி கற்பித்தல் முடங்கிப் போயுள்ள நிலையில், இயங்கலை கற்பித்தலுக்கு மாற வேண்டிய கட்டாயத்தை அவர் வழியுறுத்தினார்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலம் முழுவதும், நேருக்கு நேரான கற்றல் கற்பித்தல் முடங்கிப் போயுள்ளது. அதற்கு பதிலாக ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைவதற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
“பலர் வீட்டு அடிப்படையிலான கற்றலைச் செயல்படுத்த கூகள் (Google), கூகள் வகுப்பறை (Google Classroom), செக்கூதியூப் (cikgooTUBE) மற்றும் ஜூம் (Zoom) போன்ற இயங்கலை, ஆன்லைன் பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர். பலர் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயன்பாடுகளையும் பயன்படுத்துகின்றனர். இயங்கலை விளையாட்டுப் பயிற்சியை வழங்கும் ஆசிரியர்களும் உள்ளனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.”
“ஆனால் இயங்கலை கற்றலை வீட்டிலேயே செயல்படுத்த இன்னும் தடைகள் உள்ளன என்பதையும் நான் உணர்கிறேன். எல்லா மாணவர்களுக்கும் நல்ல இணைய அணுகல் இல்லை. பலரிடம், பயன்படுத்த சரியான சாதனம், கருவி கூட இல்லை.”
“இந்த குழுவில் உள்ள மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பலவிதமான மாற்று முறைகளைப் பயன்படுத்துவதை நான் அறிவேன். எடுத்துக்காட்டாக, மாணவர் வீட்டுப்பாடங்களுக்கான கேள்விகளை அச்சிட்டு, மாணவர்களின் வீடுகளுக்கு கேள்விகளை அனுப்ப PIBG உடன் பணிபுரியும் சிலரும் உள்ளனர் என்பது எனக்குத் தெரியும்.” 2020 ஆசிரியர் தின “புதிய தலைமுறையை உருவாக்குங்கள்” என்ற கருப்பொருளுடன் இணைந்து ஒரு சிறப்பு செய்தியை வழங்கும்போது அவர் இதை கூறினார்.
இதற்கிடையில், முகிதீன், ஆசிரியர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததோடு, இந்த விஷயத்தில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பை பெரிதும் பாராட்டினார்.
இது சம்பந்தமாக, கல்வியின் எதிர்காலம் மெய்நிகர் கற்றலில் பெரிதும் உள்ளது என்று நம்புவதால், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை தொடர்ந்து வலுப்பெறும் என்றார்.
கோவிட்-19 தொற்றுநோயைத் தடுக்க கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மூடப்பட்ட பள்ளி, மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று பலருக்கு கேள்விகள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பள்ளி திறக்கப்படுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே, பள்ளி மீண்டும் திறக்கப்படுவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும், இது சுகாதார அமைச்சின் ஆலோசனையையும் கேட்டு செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
“பள்ளி திறக்கப்படும் போது, தொடக்கத்தில், மலேசிய கல்விச் சான்றிதழ் (SPM), மலேசியாவின் தொழில் சான்றிதழ் (SVM), மலேசிய உயர்நிலை பள்ளி சான்றிதழ் (STPM) மற்றும் மலேசிய உயர்நிலை மத சான்றிதழ் (STAM) ஆகிய சோதனைகளுக்கு அமரும் மாணவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம்”.
“இது, கல்வி அமைச்சினால் அமைக்கப்பட்டிருக்கும் கூடல் இடைவெளி மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் குறித்த இயக்க நடைமுறைகளை உறுதி செய்ய உதவும். பள்ளிக்கு மாணவர்களின் வருகை, பள்ளியில் அவர்களின் நாமாட்டம், வகுப்பறைக்குச் செல்லுதல், சிற்றுண்டிச்சாலைக்குச் செல்லும் நடமாட்டம், மற்றும் பல அம்சங்கள் தொடர்பான நடைமுறைகளை உள்ளடக்கியது,” என்று அவர் கூறினார்.
நாட்டின் அனைத்து கல்வியாளர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்தை தெரிவித்து, மாணவர்களுக்கு கல்வி கற்பித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்யும் ஆசிரியர்களின் அனைத்து சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கும் பிரதமர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மே 16 அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு சிறப்பு நாள் என்றும், பொதுவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு, மாணவர்களிடமிருந்து வாட்ஸ்அப், ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் வழியாக வாழ்த்துகள், பள்ளியில் பலவிதமான நிகழ்சிகள் இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு, COVID-19 பாதிப்பை நாடு இன்னும் கையாண்டு வரும் நிலையில், ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
“இருப்பினும், ஆசிரியர்களுக்கான இந்த சிறப்பு நாளை கொண்டாட முடியாது என்று அர்த்தப்படுத்துவதில்லை. ஆசிரியர்களின் பங்களிப்பு, சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. அவை தொடர்ந்து நம் அனைவரின் இதயத்திலும் போற்றப்பட்டு வளர்க்கப்படும்,” என்றார்.