கோவிட்-19: மலேசியாவில் 317 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

12 வயதிற்கு உட்பட்ட 317 குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 46 சதவீதம் ஆறு வயது அல்லது அதற்கு கீழ்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலாங்கூரில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட 77 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அடுத்து நெகேரி செம்பிலன் (48), ஜொகூர் (46).

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதுவரை குழந்தை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தீவிர சிகிச்சை பெறும் குழந்தைகளும் இல்லை என்றும் கூறினார்.

இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு வயதானவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பது போல், குழந்தைகளுக்கும் உண்டு என்று அவர் கூறினார்.

தொற்று பெரியவர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களால் பரவக்கூடும்.

“நாம் சமூகத்தில் வாழ்கிறோம். நாம் வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் கிருமியைக் கொண்டு செல்கிறோம், பண்டிகை காலங்களில் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தொற்று ஏற்படலாம்.”

“கிருமியை மீண்டும் கிராமத்திற்கு கொண்டு சென்று வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தொற்று ஏற்படும் என்று சுகாதார அமைச்சு கவலை கொண்டுள்ளது,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நுரையீரலைப் பாதிப்பதைத் தவிர, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கவாசாகி நோயால் பாதிக்கப்படுவதாகவும், இது இரத்த நாளங்களின் வீக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நூர் ஹிஷாம் கூறினார்.

வெளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும் பெரியவர்கள், குழந்தைகளுடன் பழகுவதற்கு முன் குளித்தல் அல்லது கை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கை கழுவுதல், சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் எப்போதும், குறிப்பாக நெரிசலான பகுதிகளில் முகக்கவரிகளை அணிந்துகொள்வது போன்றவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், கோவிட்-19 இன் ஆபத்துகளுக்கு ஆளாகாமல் தடுக்க தங்கள் குழந்தைகளை பேரங்காடிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.