1MDB நிதியில் 248 மில்லியன் அமெரிக்க டாலர் (RM1.08 பில்லியன்) சம்பந்தப்பட்ட பண மோசடி வழக்கில் தனது மகன் ரிசா அஜீஸை விடுவிக்க நீதிமன்றம் எடுத்த முடிவு குறித்து டாக்டர் மகாதிர் முகமதுவின் விமர்சனத்திற்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பதிலளித்துள்ளார்.
ரிசாவிற்கும் அரசு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில், வெளிநாட்டிலிருந்து 107.3 மில்லியன் அமெரிக்க டாலர் (RM465.3 மில்லியன்) மதிப்புள்ள சொத்துக்களை திருப்பி தர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
தனது முகநூல் பக்கத்தில் நஜிப், தனது மகன் ரிசாவை தற்காத்து பேசி, மகாதீரின் மகன் சம்பந்தப்பட்ட பல வணிக ஒப்பந்தங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
நேற்று, மகாதீர், ரிசாவிற்கும் அரசு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து தனது கவலையை தெரிவித்ததோடு, திருட்டு குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் திருடியதை திருப்பி அளித்தால் அவர் தப்பிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
“அவர் பில்லியன் கணக்கில் திருடியுள்ளார் … பின் அதை அவர் மீண்டும் அரசாங்கத்திடம் திருப்பித் தருகிறார். ‘இதோ நான் திருடிய பணம். இப்போதே, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என்று கூறுகிறார். நாமும், ‘சரி, பணத்தை திரும்பப் கொடுத்து விடுங்கள், ஏற்றுக்கொள்கிறோம்’ என்று சொல்கிறோம்.” என்றார் மகாதீர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தான் சவால் செய்யவில்லை என்று விளக்கிய மகாதீர், அதே நேரத்தில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
மகாதீரின் விமர்சனத்தை தொடர்ந்து பதிலளிக்கும் வகையில், நஜீப், மகாதீரின் மகன்கள் சம்பந்தப்பட்ட பல வணிக ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டினார்:
- மகாதீரின் மூத்த மகனுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தை சரிவிலிருந்து காப்பாற்ற பெட்ரோனாஸால் நிதி உதவி வழங்கப்பட்டது;
- வின்சென்ட் டான் பந்தாய் மருத்துவமனைக் குழுவை மகாதீரின் 35 வயதுடைய இரண்டாவது மகனுக்கு விற்றது;
- பந்தாய் மருத்துவமனை குழுவை தன் மகன் வாங்கிய பின், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் பொருள்கள் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள், Fomema சலுகைகள் பந்தாய் மருத்துவமனை குழுவிற்கே வழங்கப்பட்டது;
- 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் வென்றவுடன் அரசாங்கத்திற்கு எண்ணெய் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ நிறுவனமாக பெட்ரோனை நியமித்தது.
Opcom Bhd-யை உள்ளடக்கிய RM21.6 பில்லியன் தேசிய ஆப்டிகல் ஃபைபர் மற்றும் இணைப்புத் திட்டம் குறித்தும் (Pelan Gentian Optik dan Kesalinghubungan Negara (NFCP) நஜிப் எழுப்பினார். இது ஒரு வருடத்திற்குள் பாக்காத்தான் அரசாங்கத்தால் “உருவாக்கப்பட்டது, அங்கீகரிக்கப்பட்டது மற்றும் செயல்படுத்தப்பட்டது” என்று கூறப்படுகிறது. இது அந்நிறுவனத்தின் பங்கு விலையை 50 சதவீதமாக உயர்த்தியது.
“மகாதீரின் மூன்று மகன்களும் உள்ளனர்” என்று அவர் மொக்ஸானி, மிர்சான் மற்றும் முக்ரிஸ் ஆகியோரைக் குறிப்பிட்டு கூறினார்.