பிளவுபட்டு கிடக்கும் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்க முயற்சிப்போம் – ஹாடி

மத்திய கிழக்கிற்கான சிறப்பு தூதர் அப்துல் ஹாடி அவாங், அனைத்துலக அமைப்புகள் மற்றும் தலைவர்களுடனான தனது நல்லுறவைப் பயன்படுத்தி பாலஸ்தீனம், ரோஹிங்கியா மற்றும் காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பாதாக தெரிவித்தார்.

அப்துல் ஹாடியின் கூற்றுப்படி, அவரும் தனது பிற சகாக்களும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றினைக்க முயல்வர் என்றார்.

“கடினமான கடமை என்றாலும் இதை ஒரு கட்டாயப் பணியாக நான் கருதுகிறேன், எங்கள் நண்பர்களின் உதவியுடன் எதிரிகளால் பிளவுபட்ட முஸ்லிம்களை ஒன்றிணைக்க முயற்சிப்போம்.”

பாலஸ்தீனிய, ரோஹிங்கியா மற்றும் காஸ்மீர் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், அனைத்துலக அமைப்புகள் மற்றும் தலைவர்களுடனான எனது உறவை நான் மேம்படுத்துவேன்,” என்று இன்று காலை அல்ஹிஜ்ரா டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

இருப்பினும், பாஸ் தலைவர் தனது “நண்பர்கள்” என்று குறிப்பிட்டவர் யார் என்று தெரியவில்லை.

ஏப்ரல் 2 ம் தேதி, தேசிய கூட்டணி (பி.என்) அப்துல் ஹாடியை மத்திய கிழக்கின் சிறப்பு தூதராக நியமிப்பதாக அறிவித்தது.

பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் அடக்குமுறை குறித்து கருத்து தெரிவித்த அப்துல் ஹாடி, இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக போராடுவது முஸ்லிம்களின் பொறுப்பாகும் என்றார்.

உலகின் பெரும்பான்மையானவர்கள் இஸ்ரேலின் சட்டவிரோத அரசை உருவாக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று அப்துல் ஹாடி கூறினார். உண்மையில், மலேசியா, இந்தோனேசியா, புருனை போன்ற பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் நாடுகள் இஸ்ரேல் உருவாவதை அங்கீகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இந்த ரமலான் மாதத்தில், இஸ்லாமிய போராட்டத்தின் சரித்திரத்தை அரவணைக்கவும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்காக தொழுகை செய்யவும் முஸ்லிம்களுக்கு ஹாடி அழைப்பு விடுத்தார்.

“இந்த நோம்பு காலத்தில், நமக்காக மட்டுமல்லாமல் உலக முஸ்லிம் சமூகங்களுக்கும் தொழுகை செய்யுங்கள்” என்று அவர் கூறினார்.