பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் சரிவு மற்றும் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதிரின் வீழ்ச்சி, இவை இரண்டுக்கும் பின்னால் நஜிப் ரசாக் இருப்பதாகக் கூறியுள்ளார் முக்ரிஸ்.
அவரை மந்திரி பெசார் பதவியில் இருந்து அகற்ற முகிதீன் யாசினிடமிருந்து உத்தரவு வந்த போதிலும், இத்திட்டத்திற்குப் பின்னால் நஜிப் இருப்பதாக முக்ரிஸ் கூறினார்.
“1MDB பண மோசடி, எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் மற்றும் உலகில் மலேசியாவை இழிவுபடுத்தும் பல பெரும் ஊழல்களிலிருந்து தன்னை விடுவிப்பதே அவரது நோக்கம்.”
“குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோஸ்மா மன்சோரின் மகன் ரிசா அஜீஸ் வழக்கு என்ன ஆனது என்று பாருங்கள்” என்று இன்று கெடாவின் விஸ்மா டாருல் அமனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் முக்ரிஸ் கூறினார்.
இதனால், அகமட் ஜாஹிட் ஹமிடி உள்ளிட்ட பல அம்னோ தலைவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளில் இருந்து “விடுதலை பெற” முகிதீன் கதவைத் திறந்து வழிவகுத்துள்ளதாக முக்ரிஸ் கூறினார்.
“பிரதம மந்திரி ஆசனத்தை பாதுகாக்கும் நோக்கில், முகிதீன் கதவைத் திறந்துள்ள போது அவர்கள் இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர்” என்று முக்ரிஸ் கூறினார்.
அவரை மந்திரி பெசார் பதவியில் இருந்து வெளியேற்றிய நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகவும், பதவிக்காலம் முடியும் வரை எதிர்க்கட்சியில் இருப்பதில் உறுதியாக இருப்பதாகவும் முக்ரிஸ் கூறினார்.
பாக்காத்தான் அரசாங்கத்தின் போது கெடாவின் நிர்வாக செயல்திறன் நன்றாகவே இருந்தது என்றும் தேசிய கூட்டணியின் (பிஎன்) கீழ் புதிய கெடா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பார் என்றும் முக்ரிஸ் கூறினார்.