எல்லா மலேசிய இஸ்லாமியர்களுக்கும் எனது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாண்டு நோன்பு பெருநாள் மிக இக்கட்டான காலகட்டத்தில் மலர்ந்துள்ளது. நமது பெருநாள் ஒன்று கூடல்கள் சிறிய அளவில் மட்டும் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும், வழக்கமாக வெளியூர்களுக்குக் குறிப்பாக வெளி மாநிலங்களுக்குச் சென்று குடும்பத்தாருடன் நாம் ஒன்று சேர்ந்து கொண்டாடும் வாய்ப்புகள் மறுக்கப் பட்டுள்ளது.
நாம் ஆண்டுதோறும் பல பரிசுகளை வழங்கி அன்பை பரிமாறி நேசிக்கும் நம் குடும்ப உறவுகளுக்குத் தப்பித்தவறி கூடக் கொரோனா நோய்க் கிருமிகளைத் தந்து விடக்கூடாது என்பதால், நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் மக்களைப் பீடித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஒரு மார்க்கமாக அனைவருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. அதைப் பின் பற்றி நம் குடும்ப உறவுகளின் நலனைப் போற்றுவோம்.
இந்த இக்கட்டான காலக் கட்டத்தை மக்கள் ஒன்றுபட்டு மனத்திடமுடன் வெற்றிகரமாகக் கடந்து முன்னேறினால், அடுத்தடுத்த ஆண்டு பெருநாள்களை மிகச் சந்தோஷமாகக் குடும்பத்துடன் கொண்டாடலாம். கடந்த இரண்டு மாதங்களாகத் தொழிற்துறைகள் முடங்கிக் கிடப்பதால் பலர் வேலை இழந்தும், மேலும் பலர் வருமானம் குறைந்தும், சிக்கலான பொருளாதாரச் சூழ்நிலையில் இவ்வாண்டு நோன்பு பெருநாளைக் கொண்டா வேண்டியுள்ளது.
இவ்வாண்டு நீண்ட தூர பிரயாணங்களை நாம் தவிர்பதால் சாலை விபத்துகள் குறையலாம், இருப்பினும் குறுகிய தூர பயணம் என்பதால் நாம் சாலைகளில் அலட்சியம் காட்டக்கூடாது. சாலை பயணங்களின் போது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அனைத்து மலேசிய இஸ்லாமியர்களுக்கும் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவர்கள் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.