ரிசா அஸிஸின் விடுவிப்பை மறுஆய்வு செய்யப்படவேண்டி விண்ணப்பம் தள்ளுபடி

நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிசா அஜீசை நிபந்தனையுடன் விடுவித்த நீதிமன்றத்தின் முடிவை மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

இன்று பிற்பகல் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, வழக்கறிஞர் ஷாஹருதீன் அலி இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

நேற்று (மே 21) தேதியிட்ட துணை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய கடிதம் மூலம் இது தனக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். நிராகரிப்புக்கு எந்த காரணமும் கூறப்படவில்லை என்றும் ஷாஹாருதீன் கூறினார்.

“எனது கடிதத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் நீதிபதி தள்ளுபடி செய்வது நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன்,” என்று ஷாஹருதீன் கூறினார்.

அதே நேரத்தில் ஷாஹருதீன் அடுத்து என்ன செய்வது என்று பரிசீலிப்பதாகவும் கூறினார்.

ரோஸ்மா மன்சோரின் மகனான ரிசா, 1எம்.டி.பி (1MDB) மலேசிய முதலீட்டு நிறுவனத்தின் நிதி சம்பந்தப்பட்ட பண மோசடிகள் தொடர்பாக ஐந்து வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

சம்பந்தப்பட்ட மொத்த தொகை 248 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM1.25 பில்லியன்) ஆகும்.

மே 14 அன்று நீதிமன்றத்தின் டி.என்.ஏ.ஏ தீர்ப்பின் மூலம் – ஒப்புக் கொள்ளப்பட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 1எம்.டி.பி நிதி மூலம் வாங்கிய வெளிநாட்டு சொத்துக்களை மலேசிய அரசாங்கம் மீண்டும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய அரசாங்கத்தால் மீட்கப்பட வேண்டிய மதிப்பு 107.3 மில்லியன் அமெரிக்க டாலர் (RM465.3 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.