கோவிட்-19: 78 புதிய பாதிப்புகள், 63 பேர் குணப்படுத்தப்பட்டனர், ஓர் இறப்பு

மலேசியாவில் மேலும் 78 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,137 ஆக உள்ளது.

நண்பகல் நிலவரப்படி, மேலும் 63 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 5,859 ஆகக் கொண்டு வந்துள்ளது.

செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் தற்போதைய எண்ணிக்கை 1,163 ஆகும்.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 25 பாதிப்புகள் அடங்கும் என்றார்.

“53 உள்ளூர் தொற்று பாதிப்புகளில் 40 மலேசியரல்லாத குடிமக்கள் அடங்குவர். அவர்களில் 25 பேர் புக்கிட் ஜாலீலில் உள்ள குடிவரவு தடுப்புக்காவல் நிலையத்தில் கண்டறியப்பட்டனர்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

ஒன்பது கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றன. இவற்றில், ஐந்து பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.

“கோவிட்-19 தொடர்பான மற்றொரு இறப்பு இன்று பதிவாகியுள்ளது. இதனால், மலேசியாவில் கோவிட-19 இறப்புகளின் எண்ணிக்கை 115 அல்லது மொத்த பாதிப்பில் 1.61 சதவீதம் ஆகும்”.

“115வது இறப்பு (‘நோயாளி 3616’) – நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றின் பின்னணியைக் கொண்ட 65 வயதான மலேசிய நபர்” என்று அவர் கூறினார்.