பிப்ரவரி 24 ஆம் தேதி டாக்டர் மகாதிர் முகமது பிரதமர் பதவியிலிருந்து விலகியது 22 மாத கூட்டணி ஆட்சியில் இருந்த பாக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.
மகாதீரின் நெருங்கிய நண்பராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் அறியப்படும் டைம் ஜைனுதீனிடம், நாட்டின் அரசியல் நிபுணர் என்று அழைக்கப்படும் மகாதீர் உண்மையில் தவறு செய்துவிட்டாரா என்று கேட்கப்பட்டது.
மகாதீர் பதவி விலகுவதற்கு முன்னதாக பெர்சத்துவின் உச்ச மன்ற கூட்டம் குறித்து குறிப்பிட்டுள்ள டைம், முன்னாள் பிரதமர் விரைவில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் என்றார்.
“அவர் தவறு செய்தாரா இல்லையா என்று சொல்வது எளிதல்ல. அப்போது அவருக்கு அதிக நேரம் இல்லை. அவர் விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.”
“இப்போது நீங்கள் எல்லா தகவல்களையும் பார்க்கும்போது, அவர் செய்தது சரியா, தவறா, என்று எளிதாக சொல்ல முடியும். ஆனால் அந்த நேரத்தில், அவர் எல்லா திசைகளில் இருந்தும் அழுத்தத்தை சந்தித்த போது, அவர் செய்தது தவறா? அந்த நேரத்தில் நாம் அவருடைய நிலையில் இல்லை,” என்றார்.
புதிய அரசாங்கம், மக்கள் ஆணைக்கு துரோகம் இழைத்து விட்டது என்று டைம் மேலும் வலியுறுத்தினார்.
“எனது கொள்கைகள் மாறவில்லை. இந்த கூட்டணி நியாயமானதா இல்லையா என்பதே கேள்வி.”
“அந்த கட்சிகள் எந்தவொரு கூட்டணியையும் உருவாக்க ஒன்றிணையலாம். ஆனால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு அரசாங்கமாக மாறியுள்ளனர். இது மக்களின் விருப்பங்களுக்கும் கட்டளைகளுக்கும் ஏற்ப இல்லை.”
“மக்கள் வழங்கிய ஆணையை நாம் மதிக்க வேண்டும். மக்கள் பாக்காத்தான் அரசாங்கத்திற்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 15-வது பொதுத் தேர்தல் வரை ஆட்சி செய்ய வாக்களித்தார்கள். மக்களின் விருப்பங்களை நாம் மதிக்க வேண்டும்.”
“தேசிய கூட்டணி இந்த ஆணையை மதிக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
புதிய அரசாங்கத்தில் இன ரீதியான ஏற்றத்தாழ்வு பற்றிய பிரச்சினையையும் டைம் எழுப்பினார். எம்.சி.ஏ (MCA) மற்றும் எம்.ஐ.சி (MIC) பிரதிநிதிகளை அமைச்சரவையில் நியமித்துள்ளது வெறும் பெயரளவு செயல்கள் மட்டுமே என்று குறிப்பிட்டு, நாடாளுமன்ற இடங்களில் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறினார்.
சில எம்.சி.ஏ தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி) பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்க விவகாரங்களில் அவர்களுக்கு குரல் உரிமை இல்லை என்று டைம் கூறினார்.
“அப்படியானால், அரசாங்கத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை சரியாக பிரதிநிதித்துவப்படுத்துபவர் யார்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்..