‘ஆர்.ஓ.எஸ்.’ – நம் முன்னாள் பிரதமர்களின் தவறுகள்

கருத்து | பிப்ரவர் 4, 1988-ல், உயர்நீதிமன்ற நீதிபதி ஹருன் ஹஷிம், அம்னோ சட்டவிரோதமான கட்சி என அறிவித்தபோது, நமது இரண்டு முன்னாள் பிரதமர்களான துங்கு அப்துல் ரஹ்மான் – ‘சுதந்திரத் தந்தை’ – மற்றும் துன் உசேன் ஓன், ‘அம்னோ மலேசியா’ என்றப் புதியப் பெயரில் கட்சியைப் பதிவு செய்ய முயன்றார்.

உள்துறை அமைச்சரின் கீழ் செயல்பட்ட, அமைப்புகள் பதிவகம் (ஆர்ஓஎஸ்) ‘அம்னோ மலேசியா’வை நிராகரித்தது, ஆனால் அப்போது பதவியில் இருந்த பிரதமரால் பதிவுக்கு அனுப்பப்பட்ட ‘அம்னோ பாரு’ எனும் மற்றொரு கட்சிக்கு, 1988, பிப்ரவரி 13-ம் தேதி, அனுமதி கொடுத்தது. ஆம், அப்போது பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் துன் மகாதீர், மேலும் ஆர்.ஓ.எஸ். அவரது அமைச்சின் கீழ் இயங்கியது.

ஜூலை 28, 2017-ல், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஆர்.ஓ.எஸ்.-இல், பதிவுக்கு விண்ணப்பித்தது. ஆர்.ஓ.எஸ். பதிவைத் தாமதப்படுத்திக்கொண்டே இருந்தது. இந்த தாமதத்தை, மற்றொரு முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர், ஒருவித சதிநாசவேலை என்று சொன்னார். அதற்கு, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ஜாஹிட் ஹமிடி, ஆர்.ஓ.எஸ். தனது அமைச்சின் கீழ் இருந்தபோதிலும், பி.எச். விண்ணப்பத்தை ஏற்பதற்கோ நிராகரிப்பதற்கோ முடிவெடுப்பது தனது கையில் இல்லை என்றும், இந்தப் பிரச்சினையில் ஆர்.ஓ.எஸ். தொழில் ரீதியாக செயல்படும் என்றும் உறுதியளித்தார்.

பின்னர், ஏப்ரல் 5, 2018-ம் ஆண்டு, தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, ஆர்.ஓ.எஸ். தற்காலிகமாக பெர்சத்து கட்சியின் (பிபிபிஎம்) பதிவை இரத்து செய்தது. எனவே, பி.எச். பதிவு செய்யப்படவில்லை, பெர்சத்துவின் பதிவு இரத்து செய்யப்பட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் பி.கே.ஆர் சின்னத்தின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டன.

அதன்பிறகு, மே 9, 2018-ல், பி.எச். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ஓர் ஆச்சரியம் நடந்தது. வெற்றி பெற்ற ஒரு வாரத்தில், மே 16 அன்று, ஆர்.ஓ.எஸ். பி.எச். மற்றும் பெர்சத்து கட்சியைப் பதிவு செய்ய ஒப்புதல் அளித்தது. இதனை, அப்போது பிரதமராக பதவியில் இருந்த டாக்டர் மகாதீர் முகமது அறிவித்தார்.

இப்போது மீண்டும், இந்த ஆண்டு மே 5-ம் தேதி, டாக்டர் மகாதீர் முகமது பெர்சத்து கட்சியின் தலைவர் இல்லை என்று ஆர்.ஓ.எஸ். கூறியுள்ளது. அதற்குப் பதிலாக, தற்போது பிரதமர் பதவியில் இருக்கும் முஹிட்டின் யாசின்தான், பெர்சத்து கட்சியின் தலைவர் என்றும் அது கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் மகாதிர் இதனை எதிர்த்து சவால் விட்டிருக்கிறார்.

முன்னாள் பிரதமர்கள், இந்த ஆர்.ஓ.எஸ்.-இன் பங்கைப் புரிந்துகொண்டு, இதுபோன்ற தொடர்ச்சியான நாடகங்களில் இருந்து மக்களை ஏன் காப்பாற்ற விரும்பவில்லை. எனவே, சுயாதீனம் மற்றும் தொழில்நிபுணம் கொண்டவர்கள் என அழைக்கப்படும் ஆர்.ஓ.எஸ். யாருடைய அறிவுறுத்தலுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது? தற்போது பதவியில் இருக்கும் பிரதமருக்கா அல்லது முன்னாள் பிரதமருக்கா?

எஸ் அருட்செல்வன், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்