முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மற்றும் கட்சியை விட்டு வெளியேறிய மற்ற 9 எம்.பி.க்களும் பெர்சத்து கட்சியில் சேர இன்னும் தங்கள் உறுப்பினர் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்று மர்சுகி யாஹ்யா கூறினார்.
பெர்சத்துவின் பொதுச்செயலாளராக டாக்டர் மகாதீர் முகமட் நியமித்து இருக்கும் மர்சுகி, முன்னதாக முகிதீன் யாசினால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.
அஸ்மின் குழு அதிகாரப்பூர்வமாக பெர்சத்துவில் இணைந்ததை முகிதீன் உறுதிப்படுத்தியிருந்தார்.
“நான் அஸ்மினிடம் தனிப்பட்ட முறையில் உறுப்பினர் படிவம் குறித்து கேட்டேன். இந்நாள் வரை எந்த பதிலும் இல்லை. உறுப்பினராக சேர விண்ணப்பமும் செய்யவில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன்.”
“அவர்கள் ஏற்கனவே உறுப்பினர்கள் என்று கூறி முகிதீனிடமிருந்து அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது.”
“எனவே அவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்களா என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். அப்படி இருந்தால், ஒரு உறுப்பினர் எண் இருக்க வேண்டும், அவர் எங்கே எந்த தொகுதியில் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.”
பிப்ரவரியில் நடந்த ‘ஷெரட்டன் நகர்வின்’ போது, அஸ்மினும் மற்ற 9 பேரும் பெர்சத்துவில் இணைந்ததாகக் கூறப்பட்டது.
முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் மார்ச் 11 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்மின் மற்றும் ஒன்பது எம்.பி.க்கள் பெர்சத்துவில் இணைந்ததை முகிதீன் உறுதிப்படுத்தினார்.
“ஆம், அவர்களின் விண்ணப்பத்தை பெர்சத்து உச்ச மன்றம் ஏற்றுக்கொண்டது” என்று முகிதீன் அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அஸ்மினைத் தவிர, மற்ற ஒன்பது எம்.பி.க்கள் ஜுரைடா கமாருதீன் (ஆம்பாங்), சைபுதீன் அப்துல்லா (இன்ரா மாக்கோத்தா), கமாருடின் ஜாபார் (பண்டார் துன் ரசாக்), மன்சோர் ஓத்மான் (நிபோங் தெபால்), ரஷீத் ஹஸ்னான் (பத்து பாஹாட்), அலி பிஜு (செராடோக்), வில்லி மோங்கின் (புன்சாக் போர்னியோ), மற்றும் ஜொனாதன் யாசின் (ரனாவ்) ஆகியோர் அடங்குவர்.