ஈகைத் திருநாளின் இரண்டாவது நாள்

இன்று நோன்பு பெருநாளின் இரண்டாம் நாள். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியதைத் தொடர்ந்து விருந்தினர் வருகை மற்றும் உபசரிப்புகளை இனி தொடர முடியாது.

கோவிட்-19 பரவல் ஏற்படுவதைத் தடுக்க, நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் முதல் நாளில் மட்டுமே அரசாங்கம் அந்த அனுமதியை வழங்கியது. அதுவும், 20 நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே கொண்டாட்டங்கள் எனவும், கூடல் இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் சுகாதாரத்தை பராமரித்தல் போன்ற எஸ்ஓபி-களுக்கு இணங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

சில பிடிவாதமானவர்கள் எஸ்ஓபி-களுக்கு இணங்காமல், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப நாடு முழுவதும் முயற்சித்து வந்தாலும், நாட்டில் பெரும்பாலோர் இந்த ஆண்டு விழாக்களின் போது புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது.

உதாரணமாக, ஒவ்வொரு ஆண்டும் நோம்பு பெருநாளின் முதல் நாள், முஸ்லிம்கள் மசூதிகள், தொழுகை தலங்கல் மற்றும் கல்லறைகளுக்கு செல்வார்கள். ஆனால், இவ்வாண்டு பெரும்பாலான மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட தடை உத்தரவைத் தொடர்ந்து அவ்விடங்கள் அமைதியாகவும் ஆட்களின்றியும் காணப்பட்டன.

இந்த தடை, நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு அவர்களின் குடும்ப நட்பு உறவை வலுப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

வீட்டிற்குத் திரும்ப முடியாத நபர்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் வழி வீடியோ அழைப்பு பயன்பாடுகளின் மூலம் தங்கள் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்கின்றனர்.

விடுமுறை நாட்களில் ஒருவருக்கொருவர் வருகை தருவதன் மூலம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை அயலவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மத மக்களுடன் நெருங்கிய உறவை வளர்ப்பதற்கான சிறந்த நேரமாக பாரம்பரியமாக இதுபோன்ற கொண்டாட்டங்கள் அமைந்துள்ளன.

இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோயினால் இந்த ஆண்டு இந்த பாரம்பரியத்தைத் தொடர முடியவில்லை. உபசரிப்புகளின் போது பலருடன் ஒரு நேரத்தில் சந்திப்பதும், இதில் முதியவர்கள், நாட்பட்ட நோயாளிகள் மற்றும் குழந்தைகள் போன்ற அதிகமாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் அடங்கியிருப்பர் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாண்டு உபசரிப்புகளுக்கு அனுமதியில்லாமல் போனது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் கருத்துப்படி, கோவிட்-19 இறப்புகளில் 62.6 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்தும், 80.7 சதவீத இறப்புகளில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் பிற நோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களும் உள்ளனர் என்றுள்ளார்.

எனவே, இந்த ஆண்டு ஷாவால் மாதத்தை புதிய நெறியில் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதில் முஸ்லிம்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.