கட்சி தாவிய உறிப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் அழைப்பு

தேசிய கூட்டணிக்கு (பிஎன்) ஆதரவளிக்க, மாநில அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பினாங்கு அமைச்சர் செள கோன் யியோவுக்கு மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலிக் மெகதாப் முகமட் இஷாக் (பெர்தாம்) மற்றும் சோல்கிப்லி முகமட் லாசிம் (தெலுக் பாகாங்) ஆகியோரின் நடவடிக்கை, கெடாவைப் போல மாநில அரசாங்கத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கவில்லை. ஆனால் அது மாநில சட்டசபையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்த்தியுள்ளது.

இதற்கு முன்னர் அரசியல் நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் இருந்த போது, இரண்டு முறை மாநில அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்திய அந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் சோவ் இன்னும் கடுமையுடன் இருக்க வேண்டும் என்று பினாங்கு அமானா இளைஞர் குழு இன்று வலியுறுத்தியுள்ளது.

“உண்மையில், அவர்களின் நடவடிக்கை பாக்காத்தான் அரசாங்கத்திற்கு மக்கள் அளித்த ஆணைக்கு துரோகம் இழைத்ததாகக் கருதப்படுகிறது. பொதுத் தேர்தலின் போது அனைத்து வேட்புமனுக்களும் அப்போதைய பி.கே.ஆர் தலைவர் டாக்டர் வான் அஜிசாவால் கையெழுத்திடப்பட்டன.”

“இந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றி, பாக்காத்தானுடனான நட்புறவின் அடிப்படையில் பெற்றது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, பினாங்கு பி.கே.ஆர் இளைஞர் தலைவர் பாஹ்மி ஜைனோல், “மக்கள் ஆணைக்கு துரோகம் இழைக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி தங்களின் இடத்தை காலி செய்ய வேண்டும்” என்ற வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சோவை நினைவுபடுத்தினார்.

அப்படி செய்யும் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோவ் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார்.

இது, மாநிலத்தில் கட்சி தாவும் செயல்கள் தொடர்பான மாநில அரசியலமைப்பு (திருத்த) சட்டம் 2012க்கு (Enakmen Perlembagaan Negeri (Pindaan) 2012) இணங்க உள்ளது என்றார்.

இதற்கிடையில், தங்கள் நம்பிக்கைக்கு துரோகம் செய்த காலிக் மற்றும் சோல்கிப்லி வாக்காளர்களுக்கு இது ஒரு பெரும் ஏமாற்றம் என்று கைருல் கூறினார்.

இந்த விஷயத்தில் துரோகிகளை அகற்றி கட்சியை “தூய்மைப்படுத்த” வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.

“பினாங்கு பாக்காத்தான் அரசாங்கத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்த இது விரைவுபடுத்தப்பட வேண்டும்.”

“கட்சி தாவிய இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மாநில அரசியலமைப்பு (திருத்த) சட்டம் 2012 இன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க அமைச்சரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.