பி.எஸ்.எம். : அதிகமான எண்ணிக்கையில் சட்டவிரோத குடியேறிகள், யார் பொறுப்பு?

கருத்து | நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ.) அமலில் இருக்கும்போது, புலம்பெயர்ந்த சமூகத்தினர் மீது கடுமையான குடியேற்ற சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கையானது, மலேசியாவில் கோவிட் -19 தொற்றுநோயின் வரையறுக்கப்பட்ட ஓர் அம்சமாகவே மாறி வருகின்றது. தொடரும் இச்சோதனைகள், பொது மக்களிடையே பல்வேறு வகையான கருத்துகளை உருவாக்கும் நிலையில், புலம்பெயர்ந்தோர் மீது எதிர்ப்பும் இனவெறி உணர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சட்டவிரோத குடியேறிகள் (பாத்தி) எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருவதற்கு யாரைக் குற்றம் சொல்வது? குடிநுழைவுத் துறையும் நாட்டு மக்களும் இதற்கு புலம் பெயர்ந்தவர்கள்தான் காரணம் என்று, அவர்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்துகின்றனர்.

மலேசியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான ‘பாத்தி’ அல்லது சட்டவிரோத குடியேறிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஒரே மாதிரியான குழுவைச் சார்ந்தவர்கள் அல்லர், என்றபோதிலும், ‘சட்டவிரோத’ வெளிநாட்டினர் என அனைவரையும் பொதுவாக முத்திரை குத்தி ஒன்றாக வகைப்படுத்தப்படுகின்றனர். ஆவணப்படுத்தப்பட்டு, பின்னர் இங்கு ஆவணமற்றவர்களாக மாறிவிடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த நாட்டின் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கும் அகதிகள், சுற்றுலா என்ற பெயரில் நாட்டிற்குள் நுழைந்து, பின்னர் இங்கேயே அதிக நாட்கள் தங்கிவிடும் சுற்றுப்பயணிகள், தீய நோக்கங்களுடன் நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டினர் என அனைவரும் ‘பாத்தி’-யின் கீழ் அடக்கப்படுகின்றனர்.

அகதிகள், பாதிக்கப்பட்டப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஊடுருவும் நபர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வகைப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அவர்கள் ஒரே மாதிரியாக, கடினமான வகையில் கையாளப்படுகிறார்கள், குறைந்தபட்சம் சோதனைகள் முடியும் வரை அனைவருமே தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு, எதிரிகளைப் போல் கருணை இல்லாமல் வெளியேற்றப்படுவார்கள்.

எந்தவொரு நாடும், தேசியப் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், நாட்டிற்குள் ஊடுருவும் வெளிநாட்டு நபர்களை கையாள்வதில் ஓர் அரசாங்கம் எவ்வகையிலும் சமரசமும் கொள்ளாது என்பதும் உண்மை. சிறிது முரண்கள் இருந்தாலும், பொதுமக்களைப் பொறுத்த வரையில், இது குடிநுழைவுத் துறையினரின் களம். ஆனால், இங்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்னவென்றால், அகதிகள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் அரசாங்கத்தின் எதிரிகளாகக் கருதுவதுதான்.

முதலாவதாக, இந்த இரு குழுக்களும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல; இரண்டாவதாக, அடுத்தடுத்து ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கங்கள் தற்போதைய இந்தச் சிக்கலின் பெரும்பகுதியைத் தங்கள் நிர்வாகத்தின் குறைகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தொழிலாளர் இடம்பெயர்வு மற்றும் அகதிகள் பிரச்சினையிலிருந்து எழுந்த சிக்கல்களுக்குப் பாரிசான் நேசனல் (பி.என்.) மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கங்கள் தீர்வுகாணத் தவறிவிட்டன.

நாட்டின் தேவைக்காக, புலம்பெயர் தொழிலாளர்களைச் சேர்ப்பதற்கு முன்னர், ஏற்கனவே கிடைக்கக்கூடிய ‘அகதித் தொழிலாளர்களை’ (சுமார் 120,000 எண்ணிக்கையில்?) ‘புலம்பெயர்த் தொழிலாளர்’ தொகுப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற முன்மொழிவைப் பரிசீலிக்க அரசாங்கம் தயக்கம் காட்டியது அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ‘அகதிகள்’ என்ற நீண்ட பயணத்தில் இருக்கும் அவர்களுக்கு ஒரு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க இது உதவும். இதிலும் சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன, ஆனால், அதனை முன்னெடுக்காமல் விட்டுவிட்டால், இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வே கிடைக்காமல் போகலாம். பிரச்சனைகள் இல்லாததுபோல் காண்பிப்பது அல்லது அதற்கான தீர்வை ஒத்திவைப்பது, இரண்டுமே பிரச்சினையை நிலத்தடிக்கு இட்டுச் செல்வதோடு; புலம் பெயர்ந்தோர் இங்கு தங்களை நிலைநிறுத்திகொள்ள பிச்சை எடுக்கவும் தங்களது உழைப்பைச் சுரண்டி வாழ அனுமதிக்கவும் வழிவகுக்கும்.

ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களான ‘பாத்தி’ மீது, மலேசிய அரசாங்கங்களும் ஆளும் உயரடுக்கு வர்க்கத்தினரும் பெரும் பங்கெடுக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாகத்தின் தனியார்மயமாக்கல், நூறாயிரக்கணக்கான வறிய, கடன்பட்ட உழைப்பாளர்களின் குடியேற்றத்தை, ஆளும் உயரடுக்கின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் ஓர் இலாபகரமான தொழிலாக மாற்றியது. இந்த சூழ்நிலைகளில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்ளூர் மக்கள் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த வலுவான துறையைச் சீரமைக்க, ஒரு விரிவான கொள்கையை உருவாக்க தயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் இடம்பெயர்வுடன் தொடர்புடைய அமலாக்க அமைப்புகளின் பரவலான ஊழலும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பலவீனங்கள் மற்றும் தோல்விகளின் விளைவாக, கடப்பிதழ் மற்றும் வேலை அனுமதிகளுடன் சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழையும் ஏராளமான தொழிலாளர்கள், பின்னர் ‘சட்டவிரோத தொழிலாளர்களாக’ மாற்றப்படுகின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அகதிகளுக்கான தொழிலாளர் இடம்பெயர்வு குறித்து, விரிவான ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும் எனப் பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கடுமையாக முயன்று வருகின்றனர். தற்போதுள்ள கொள்கையில் பல இடைவெளிகள் உள்ளன; அவை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சட்ட உரிமை நிலையை இழக்க வழிவகுக்கின்றன. பாரிசான் நேஷனல் அரசாங்கம் இவ்விஷயத்தில் மந்தமாக நகர்ந்ததால், ஓர் அமைச்சர் உட்பட அத்துறை சார்ந்த உறுப்பினர்கள் பலர் இதன்வழி மிக நேர்த்தியாகச் சம்பாதித்து வந்தனர். தொடக்கத்தில், பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கம், ஒரு சுயாதீன குழுவை நியமித்து, அதன்வழி நிலைமையைச் சரிசெய்ய பரிந்துரைகளை வழங்குவோம் என வாக்குறுதி கொடுத்தது. ஆனால், அக்குழுவின் பரிந்துரைகளால், அவர்கள் ஏமாற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஏன்? ஆவணமற்ற தொழிலாளர்களால் மூழ்கியிருக்கும் அந்நியத் தொழிலாளர் சந்தையினால், அடிமட்ட ஊதியத்திற்குத் தொழிலாளர்கள் கிடைப்பதை அவர்கள் விரும்புவதாலா?

நம் நாட்டின் பொருளாதாரத்தில், ஒரு பெரும் பங்கு வகிக்கும் (70%-க்கும் மேற்பட்ட எஸ்.எம்.இ. நிறுவனங்கள் ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றன) மற்றும் நம் நாட்டின் கொள்கை பலவீனங்களால் பெரும்பாலும் பாதிக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்களை இலக்கு வைப்பது, கட்டுப்பாட்டை மீறிய ஒரு சூழ்நிலையின் உண்மையான காரணத்தை நம் கண்ணில் இருந்து மறைக்கிறது. ‘பாத்தி’ என, ஆவணங்கள் இல்லாத அனைத்து புலம்பெயர்ந்தோரையும் முத்திரை குத்துவது சிக்கலானது, அகதிகள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பயங்கரவாத சந்தேக நபர்களைப் போல கையாள முடியாது.

புலம்பெயர்ந்தோர் மீது மேற்கொள்ளப்படும் இத்தகைய சோதனைகள் பலனளிக்கின்றனவா? பல ஆண்டுகளாக, பல சோதனைகள் நடந்தபோதிலும், ‘பாத்தி’-களின் எண்ணிக்கை குறையாது இருப்பது, இச்சோதனைகள் ஒரு சிறந்த தீர்வுவல்ல என்பதையேக் காட்டுகிறது. 11-வது மலேசியத் திட்டம், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் ஒரு சீர்திருத்த சிறந்த பாதையை வடிவமைத்து வழங்குகிறது. தொழில் தேவைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையை வகுக்க இந்தத் திட்டம் வழிமொழிகிறது. தொழிலாளர் ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் நலனுக்கான முழுப் பொறுப்பையும் முதலாளிகள் ஏற்பதோடு, வரியையும் – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது அதிக சார்புநிலையைத் தடுக்க – செலுத்த வேண்டும். முக்கியமாக, இந்தத் திட்டத்தின் வழி, தனியார் முகவர்களின் பங்கு நீக்கப்படுவதோடு, புலம்பெயர் தொழிலாளர் ஆட்சேர்ப்பு, கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் அரசாங்கம் – மனிதவள அமைச்சு – முன்னிலை வகிக்கும். மேலும், ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களின் பிரச்சினை ‘சிறந்த நிர்வாகம் மற்றும் பயனுள்ள அமலாக்கம்’மூலம் தீர்க்கப்படும் என்றும் அது கூறுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய அறிவுப்பூர்வமான திட்டங்கள் இருந்தபோதிலும், அர்த்தமுள்ள மாற்றங்களைச் செய்ய, நாட்டில் எந்த அரசியல் விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இராணி இராசையா, புலம்பெயர் தொழிலாளர் நலன் பிரிவு, மலேசிய சோசலிசக் கட்சி