நோன்பு பெருநாளுக்குப் பிறகு அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று பொதுச் சேவை இயக்குநர் முகமட் கைருல் ஆதிப் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (பி.கே.பி.பி) போது மாநிலத்தின் எல்லை தாண்டும் தடையை மீறி, தங்கள் ஊர்களில் சிக்கியதற்கான காரணங்களைக் கூறும் அரசு ஊழியர்களின் போக்கு ஏற்கப்படாது என்றார்.
“மார்ச் 17 தேதியிட்ட பொது சேவைத் துறை சுற்றறிக்கையில், துறைத் தலைவரின் கட்டளைக்கு ஏற்ப, அதிகாரிகள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.”
“ஊழியர் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ பணிக்கு வர முடியாவிட்டால், அவர் பணியில் இருந்து விலகி இருப்பதாகக் கருதப்படுவதோடு, பொது ஆணை பிரிவு D (அரசு அலுவலர்கள் விதிமுறைகள் 1993-ன் கீழ் சில அபராதங்களுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.”
“வீட்டில் இருந்து பணி புரியும் ஊழியர்கள் எந்த நேரத்திலும் அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படலாம். விடுப்புக்கடிதம் சமர்ப்பிக்காமல் பணிக்கு வராவிட்டால், அவர்கள் அந்தந்த துறைகளால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்” என்று அவர் கூறினார்.
பி.கே.பி.பி.-யை மீறும் அரசு ஊழியர்களின் நடவடிக்கைகள், தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ் குற்றம் என்றும், நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
(அரசு அலுவலர்கள் விதிமுறைகள் 1993-ன் கீழ், குற்றங்களைச் செய்யும் அரசு ஊழியர்கள், எச்சரிக்கைகள், அபராதங்கள், சம்பளம் உயர்வு நிறுத்தம், சம்பள குறைப்பு அல்லது பணிநீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் தண்டனைகளுக்கும் உட்படுத்தப்படலாம்.
நேற்று, மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பி.கே.பி.பி. உத்தரவை கடைபிடிக்காமல் நோன்பு பெருநாளை கொண்டாட மாநில எல்லை கடந்து சென்று இன்னும் தங்களின் ஊர்களில் மக்கள் உள்ளனர், என்றார்.
பி.கே.பி.பி உத்தரவு அமல்படுத்துவதை அனைத்து தரப்பினரும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு நினைவூட்டிய இஸ்மாயில் சப்ரி, இன்றுவரை, மக்களை மாநிலத்தை கடக்க அனுமதிக்கக் கூடாது என்ற முடிவில் அரசாங்கம் கடுமையாக இருந்து வருகிறது என்றார்.