முவாபாக்காட் நேசனலின் (Muafakat Nasional) பலத்தை எதிர்க்க முடியாது என்பதால், தோல்வியைத் தவிர்ப்பதற்காக சினி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று பக்காத்தான் ஹராப்பானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பி.என் மற்றும் பாஸ் கூட்டணியின் வலிமையுடன் பாக்காத்தான் ஈடுகொடுக்க முடியாததால் சினி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அம்னோ மூத்த பொதுச்செயலாளர் முஸ்தபா யாகூப் இதனை கூறியுள்ளார்.
“சினி, நீண்ட காலமாக பாரிசானின் கோட்டையாக இருந்து வருகிறது. இருப்பினும், சினியில் பெல்டா நிலத் திட்டத்தின் மூலம் பாஸ் கட்சி இந்த பகுதியில் வலுவான ஆதரவை பெற்று பாரிசானின் முக்கிய எதிரியாக இருந்து வந்துள்ளது.
“முவாபாக்காட் நேசனல் தோன்றியவுடன், சீனி நிச்சயமாக பாரிசான்/முவாபாக்காட்டுக்கு சொந்தமானதாக இருக்கும். மேலும் பாக்காத்தான் மீண்டும், குறிப்பாக இன்றைய அரசியல் சூழலில், தோல்விக்கே ஆளாகும்.”
“பாரிசான் மற்றும் பாஸின் ஒட்டுமொத்த வாக்குகளை பாக்காத்தானால் சவால் செய்ய முடியாது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில், பாஸ் மற்றும் பாக்காத்தானால் சவால் செய்யப்பட்ட போதிலும், அம்னோ அந்த இடத்தை இலகுவாக வென்றது, என்றார்.
சினியில் கடந்த தேர்தலில், 4,622 வாக்குகள் அல்லது 47.2 வாக்குகள் வித்தியாசத்தில் பாரிசான் 10,027 மொத்த வாக்குகள் பெற்று வென்றது.
“பாஸ் 5,405 வாக்குகள் (25.4 சதவிகிதம்) மற்றும் பாக்காத்தான் 1,065 வாக்குகளை (5.0 சதவிகிதம்) மட்டுமே பெற முடிந்தது.
“14வது பொதுத்தேர்தலின் அரசியல் சுனாமியின் போது மட்டுமே பாக்காத்தான் இங்கு இருந்தது,” என்று அவர் கூறினார்.
எனவே, அம்னோவுக்கு வழி வகுப்பதே பொருத்தமான செயல் என்று அவர் கூறினார்.
“இது தேர்தல் ஆணைய செலவினங்களை மிச்சப்படுத்தும். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திலும் அரசாங்கத்திற்கு உதவும்” என்று அவர் மேலும் கூறினார்.
மே 6 ஆம் தேதி அன்று, அச்சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஹருன் (60) மாரடைப்பால் இறந்ததைத் தொடர்ந்து, பகாங்கில் உள்ள சினி, இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. சினியின் இடைத்தேர்தல் ஜூலை 4 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் பெக்கான் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ள சினியில் 21,251 வாக்காளர்கள் உள்ளனர்.