குடிபோதையில் வாகனம் ஓட்டும் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மது விற்பனைக்கு தடைசெய்யுங்கள் – பாஸ்

குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் தீர்க்கப்படும் வரை உடனடியாக மது உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு பாஸ், அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் ஒரு சிறப்பு அமைச்சரவைக் குழுவையும் அமைக்க வேண்டும் என்று பாஸ் தலைமை தகவல் அதிகாரி கமாருசமான் முகமட் கூறினார்.

“குடிபோதையில் வாகனம் ஓட்டுவது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. இந்த குற்றங்கள் சட்ட மற்றும் அமலாக்க பலவீனங்களினால் ஏற்படுகின்றன. அதோடு, குடிபோதையில் வாகனம் செலுத்துவோரின் சுயநலம் மற்றும் பிடிவாதம் ஆகியவற்றாலும் ஏற்படுகின்றன.”

குவாந்தானில் நேற்றிரவு குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநர் சம்பந்தப்பட்ட ஒரு பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. அதில், 41 வயது பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரத்தில் 42 வயதான சந்தேகநபர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உலக அளவில் மதுபானம் உட்கொள்ளும் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது என்ற உலக சுகாதார அமைப்பு (WHO) 2016 அறிக்கையையும் கமருசமான் மேற்கோள் காட்டினார்.