ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது நாளாக, நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான புதிய பாதிப்புகள் தொடர்ந்து மூன்று இலக்கங்களை பதிவு செய்கின்றன.
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 187 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,604 ஆக உள்ளது எனவும் கூறினார்.
நண்பகல் நிலவரப்படி, 62 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது பாதிப்பில் இருந்து மீண்டு வந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 6,041 பேருக்கு அல்லது 79.4 சதவிகிதத்திற்கு கொண்டுவந்துள்ளது.
செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கையை இப்போது 1,448 ஆக மாற்றுகிறது.
டாக்டர் நூர் ஹிஷாம் குறிப்பிட்ட 187 புதிய பாதிப்புகளில், 10 இறக்குமதி பாதிப்புகள் வெளிநாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் என்றார்.
“177 உள்ளூர் பாதிப்புகளில், 173 பாதிப்புகள் மலேசியர் அல்லாத குடிமக்கள் சம்பந்தப்பட்டவை ஆகும். அவர்களில் 155 பேர் புக்கிட் ஜலீல் குடிநுழைவு தடுப்பு முகாமில் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் செராஸ் பாதுகாவலர் திரளையில் இருந்து 13 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.”
“மலேசியர்களிடையே உள்ளூர் தொற்று நான்கு (4) பாதிப்புகள் மட்டுமே” என்று அவர் கூறினார்.
டாக்டர் நூர் ஹிஷாம், பத்தொன்பது நேர்மறை கோவிட்-19 பாதிப்புகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றன. இவற்றில், ஐந்து பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
“இன்று இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 115 ஆக அல்லது மொத்த பாதிப்புகளில் 1.51 சதவிகிதம் உள்ளது” என்று அவர் கூறினார்.