நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கோவிட்-19 பாதிப்புகளில் அதிகரிப்பைக் காணலாம் என்று மலேசிய சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“சமீபத்திய ஹரி ராயா கொண்டாட்டத்தின் போது மக்கள் மேற்கொண்ட மாநில எல்லை கடந்த பயணங்கள், உபசரிப்புகள், சந்திப்புகள் மற்றும் சமூக நடவடிக்கைகளின் மூலம் இந்த அதிகரிப்பைக் காணலாம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் தனது தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
தகவல்களின் அடிப்படையில், 16 மே 2020 முதல் இன்றுவரை சுமார் 2,449,556 வாகனங்கள் காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
“அதே காலகட்டத்தில், 18,303 வாகனங்கள் ஊர்களுக்குத் திரும்பும் அடிப்படையில் மாநிலங்களைக் கடக்க முயன்றுள்ளன. ஆனால், அவை காவல்துறையினரால் திரும்பி செல்ல உத்தரவிடப்பட்டன.”
“மக்கள் எஸ்ஓபிக்கு கீழ்ப்படியாமல் இருந்தால், கோவிட்-19 பாதிப்புகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சுகாதார அமைச்சு நம்புகிறது, இது நம் நாட்டில் மீண்டும் ஓர் அலையை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர் கூறினார்.
டாக்டர் நூர் ஹிஷாம் கடந்த 24 மணி நேரத்தில் 15 புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக அறிவித்திருந்தார்.
“எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என்று இந்த சூழ்நிலையை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.”
“சுகாதார அமைச்சு அறிவித்தபடி, கோவிட்-19 கிருமிக்கு எதிரான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை,” என்று அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையை குறிப்பிட்ட அவர், மே 26 ஆம் தேதி நிலவரப்படி 5,559,130 கோவிட்-19 பாதிப்புகள் உலகளவில் பதிவாகியுள்ளன என்றார்.
இவற்றில் 348,610 இறப்புகள் பதிவாகியுள்ளன.
“இந்த தொற்றுநோய் மிகவும் தீவிரமாக உள்ளது, இது முடிவுக்கு வருவதற்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.”
“இதுவரை, உலகெங்கிலும் உள்ள மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளில், மலேசியா 0.14 சதவீதத்திற்கு பங்களிப்பு செய்துள்ளது” என்று அவர் கூறினார்.