‘முகிதீன் அம்னோவுக்குத் திரும்புவதும், மீண்டும் நீக்கப்படுவதும் ஆச்சரியமில்லை’

பிரதம மந்திரி முகிதீன் யாசின் பெர்சத்து கட்சியில் இருந்து வெளியேறி அம்னோவில் மீண்டும் இணைந்தால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினர் ஏ காதிர் ஜாசின் கூறினார்.

இருப்பினும், அம்னோவால் அவர் மீண்டும் ஏமாற்றப்படுவார் என்பதும் ஆச்சரியமாக இருக்காது என்று அவர் கூறினார்.

பெர்சத்து கட்சியின் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்வதில் முகிதீனுக்கு உள்ள வாய்ப்புகளில் ஒன்று, மீண்டும் அம்னோவிற்கு திரும்புவது ஆகும் என்று காதிர் கூறினார்.

“முகிதீன் அம்னோவை விட்டு வெளியேறவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முகிதீனை நஜிப் ரசாக் தான் பதவி நீக்கம் செய்தார். டாக்டர் மகாதீர் முகமதுவோ அம்னோவை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். முகிதீன் அம்னோவிற்கு மீண்டும் திரும்பிச் சென்றால் அது ஆச்சரியமாக இருக்காது,” என்று அவர் கூறினார்.

1எம்டிபி (1MDB) ஊழல் தொடர்பாக நஜிப்பின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக முகிதீன், 2016 ஆம் ஆண்டில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், முகிதீன் பக்காத்தான் ஹராப்பானில் இருந்து விலகியதாக அறிவித்து, மத்திய அரசாங்கத்தின் தலைமையை ஏற்க, அம்னோ, பி.என் மற்றும் பாஸ் கட்சிகளுடன் இணைந்து, தேசிய கூட்டணியை அமைத்தார்.

இருப்பினும், பெர்சத்து கட்சி பின்னர், முகிதீனின் அணி, டாக்டர் மகாதீரின் அணி என்று இரண்டாக பிரிந்தது.

அம்னோ, தேசிய கூட்டணியை முழுமையாக ஆதரிக்கவில்லை என்றும், மாறாக தனது அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு திரும்புவதற்காக மட்டுமே அக்கூட்டணியுடன் இணைந்துள்ளது, என்று எச்சரித்தார் காதிர்.

“அம்னோவுக்கு பதவி ஆசை அதிகம் உள்ளது. பதவி இல்லாமல் அதனால் பிழைக்க முடியாது. முகிதீன் அதற்கு தேவையான மருந்துகளை கொடுக்கிறார். இதில், யாருக்கு நஷ்டம்? பெர்சத்துவுக்குத்தான்.”

“அம்னோ மற்றும் பாஸ் கட்சியைப் பொறுத்தவரை, அவர்கள் இழக்க வேண்டியது எதுவும் இல்லை. அவர்கள் 14வது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தனர். ஆனால் முகிதீன் மற்றும் அவரது நண்பர்களின் தயவுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். அம்னோ மற்றும் பாஸ் ஆகியவை தேசிய கூட்டணி அரசாங்கத்தை முவாபாக்காத் நேசனலுக்கான (Mufakat Nasional) ஒரு படியாகவே பயன்படுத்துகின்றன.”

“அவை முகிதீன் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்ற நெருக்கடிகளைக் கூட ஏற்படுத்தக்கூடும். இதனால் தேசிய கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையும். இதனால் நாடாளுமன்றத்தை கலைக்க கட்டாயப்படுத்தி பொதுத்தேர்தலையும் விரைவில் நடத்த வாய்ப்புள்ளது.”

“2016 ஆம் ஆண்டில் துணை பிரதமராகவும், அம்னோ துணைத் தலைவராகவும் இருந்தபோதே முகிதீனை அம்னோவால் எளிதில் வெளியேற்ற முடிந்தது. அவர் மீண்டும் அம்னோவால் வஞ்சிக்கப்பட்டால் நாம் ஆச்சரியப்படக் கூடாது” என்று அவர் கூறினார்.

ஆகவே, முகிதீன் மற்றும் அவரது சகாக்களின் அரசியல் விளையாட்டையும் கட்சியை சேதப்படுத்தும் நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ளுமாறு, போராட்டக் கொள்கையை இன்னும் கடைப்பிடிக்கும் பெர்சத்து உறுப்பினர்களை காதீர் நினைவுபடுத்தினார்.

14வது பொதுத்தேர்தலில், பெர்சத்து மற்றும் அம்னோ ஒரே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடங்களுக்கு போட்டியிட்டன. அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ, பெர்சத்து கட்சிக்கு வழிவகுப்பது சாத்தியமில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர் மகாதீர் கூறியது போல, அப்போது, பெர்சத்து கட்சி இறுதியாக வீழ்வதைக் காணலாம்.