“என்னை நீக்க விரும்பினால், நான் அலுவலகத்தில் காத்திருக்கிறேன்’

முகிதீன் யாசினுக்கு ஆதரவாக பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீனின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்னர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பெர்சத்து தலைமையகத்தில் டாக்டர் மகாதீர் முகமட் வந்து சேர்ந்துள்ளார்.

“நான் இப்போது பெர்சத்து தலைமையகத்தில் தான் இருக்கிறேன். என்னை பதவியிலிருந்து அகற்ற நினைத்தால், நான் அலுவலகத்தில் காத்திருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

95 வயதான அவர், அலுவலகத்திற்குள் நுழைந்து அவரது மேசையில் அமர்ந்திருப்பதை காட்டும் ஒரு காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது, மகாதீர் மற்றும் மேலும் நான்கு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்தனர். அவர்கள் எடுத்த இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பெர்சத்து கட்சியில் இருந்து அவர்களின் உறுப்பியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று முகிதீனின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

மகாதீரின் மகன் முக்ரிஸ் உட்பட அவர்கள் 5 பேரும் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இன்று மாலை திட்டமிடப்பட்ட ஹம்ஸாவின் பத்திரிகையாளர் சந்திப்பு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையில், இன்று பிற்பகல் பெர்சத்துவின் அமைச்சர் ஒருவர் பதவி விலகுவார் என்ற ஊகங்களும் அதிகரித்து வருகின்றன.