கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவுக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததையடுத்து டாக்டர் மகாதீர் முகமது, அவரது மகன் முக்ரிஸ், சையத் சாதிக், டாக்டர் மஸ்லீ, அமிருதீன், மற்றும் மர்சுகி ஆகியோர் பெர்சத்து கட்சியில் தங்கள் உறுப்பினர் பதவியை தக்கவைக்கத் தவறினர்.
டாக்டர் மகாதீர், முக்ரிஸ், சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான், டாக்டர் மஸ்லீ மாலிக், அமிருதீன் ஹம்சா மற்றும் மர்சுகி யஹ்யா ஆகியோர், பெர்சாத்து கட்சியில் தொடர்ந்து உறுப்பினர்களாக இருக்க வேண்டி ஒரு இடைக்கால உத்தரவுக்கான விண்ணப்பித்திருந்தனர்.
முன்னதாக, பெர்சாத்து கட்சியின் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஜூன் 9 ஆம் தேதி, டாக்டர் மகாதீர், முக்ரிஸ், சையத் சாதிக், டாக்டர் மஸ்லீ, அமிருதீன், மற்றும் மர்சுகி ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். பிரதமர் டான் ஸ்ரீ முகிதீன் யாசின், சங்கங்களின் பதிவுத் துறை (ஆர்ஓஎஸ்) மற்றும் சில நபர்களுக்கு எதிரான அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீதிபதி ரொஹானி இஸ்மாயில் இந்த இடைக்கால உத்தரவுக்கான விண்ணப்பத்தை நிராகரித்தார்.
அந்த ஆறு பேரும் தாங்கள் இன்னும் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கக் கோரிய இடைக்கால தடை உத்தரவைப் பெற தவறிவிட்டனர் என்று முகிதீனின் வழக்கறிஞர் ரோஸ்லி டஹ்லான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.