15வது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கக் கூட்டணி அதிக பெரும்பான்மையில் வெல்லும் என்று அம்னோ நம்பிக்கை கொண்டுள்ளது.
பிரதமர் முகிதீன் யாசினின் தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் மீது மக்கள் இப்போது நம்பிக்கையுடன் இருப்பதாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
“இப்போது மக்கள் மன மகிழ்ச்சியுடன் உள்ளனர். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து போராடும் சூழல் உள்ளிட்டு, மக்களுக்கு அரசாங்கம் நிறைய உதவிகளை வழங்குகிறது.”
“அரசிடம் பணம் இருப்பதை நிரூபிக்க பொருளாதார மீட்புத் திட்டம், தேசிய நிவாரண உதவி போன்ற பல்வேறு சலுகைகளை அளித்து மக்கள் மீது அரசாங்கம் அக்கறை காட்டியுள்ளது” என்று அவர் இன்று சந்தித்தபோது கூறினார்.
லிம், மகாதீர் ஏமாற்றுவதாகக் கூறினார் தாஜுதீன்
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முந்தைய சில போலிக் குற்றச்சாட்டுகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாலும் 15வது பொதுத் தேர்தல் அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் காணலாம் என்று தாஜுதீன் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் முன்பு கூறியது போல் நிதி ரீதியாக நாடு திவாலாகும் என்பதை பி.என் அரசாங்கம் பொய்ப்பித்துள்ளது என்றார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஆகியோர் கூறியது போல் நாடு திவாலாகிவிடும் என்ற குற்றச்சாட்டுகள் ஒரு பொய்யான கூற்றாகும் என்றார் தாஜுதீன்.
“நாடு திவாலாகும் நிலையில் இருந்தால், பிரதமர் முகிதீன் மக்களுக்கு பல நிதி உதவிகளை எவ்வாறு கொண்டு வர முடியும்?”
“லிம் மற்றும் மகாதீர் ஏமாற்றுகிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது.”
“அவர்களின் குற்றச்சாட்டுகள் தவறானவை. மகாதீர் உலகம் முழுவதும் சென்று, பின் ஜப்பானில் இருந்து கடன் வாங்கினார் என்பதும், பாரிசான் அரசாங்கம் பணத்தை கொள்ளையடித்தது என்பதும், எல்லாம் பொய்”.
“எனவே அவை எல்லாம் சரியல்லை என்பது இப்போது மக்களுக்கும் தெரியும். பொதுத் தேர்தல் வந்தால் மக்கள் எங்களிடம் திரும்பி வருவார்கள். அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளை ஆதரிப்பார்கள்” என்று அவர் கூறினார்.
தேர்தல் விரைவில் நடைபெறுமா இல்லையா என்பது குறித்து உறுதியாக தெரியாத போதிலும், அம்னோ அதற்குத் தயாராக உள்ளது என்பதை தாஜுதீன் மேலும் தெளிவுபடுத்தினார்.