டாக்டர் மகாதீர் முகமதுவை அடுத்த பிரதமராக நியமிப்பதை பி.கே.ஆர் கட்சியின் மத்திய தலைவர்களும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர்.
இன்று காலை மத்திய செயற்குழு (எம்.பி.பி) மற்றும் பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு ஆன்லைன் கூட்டத்திற்குப் பிறகு அவர்களின் அறிக்கையில் இது எதிரொலித்தது.
“துன் டாக்டர் மகாதீரை பிரதமராக நியமிப்பதற்கான முன்மொழிவை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் டத்தோ செரி அன்வார் இப்ராஹிமை பிரதமராக நியமிக்க பக்காத்தான் ஹராப்பான் ஒருமித்த கருத்துடன் உடன்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், மலேசியாவைக் காப்பாற்றுவதற்கும் மக்களின் ஆணையை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், டாக்டர் மகாதீர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சி தயாராக உள்ளது.
பாக்காத்தான் பிளஸ் கூட்டத்தில் விவாதித்தபடி டாக்டர் மகாதீர் பிரதமராகவும், அன்வார் துணை பிரதமராகவும் இருப்பது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு டிஏபி அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் முன்பு பி.கே.ஆருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பாக்காத்தான் பிளஸ் எனப்படுவது, பி.கே.ஆர், டி.ஏ.பி, அமானா, வாரிசான், மகாதீர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கூட்டணியைக் குறிக்க தற்போது பயன்படுத்தப்படும் பெயர் ஆகும்.
அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதற்கு முன்பு, பிரதமராக வழிநடத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று டாக்டர் மகாதீர் முன்பு பரிந்துரைத்திருந்தார். இந்த திட்டத்தை டிஏபி மற்றும் அமானா ஏற்றுக்கொண்டன என்று லோக் கூறினார்.
எவ்வாறாயினும், முன்னாள் பிரதமரான மகாதீர், முந்தைய ஒருமித்த கருத்துக்கு முரணாக இருப்பதாகக் கூறி, இந்த முடிவு பி.கே.ஆருக்கு சாதகமாக இல்லை என்று நிராகரித்ததுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் பிஹெச் அரசாங்கம் பொறுப்பேற்றபோது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகாதீர் தனது பதவியை அன்வாருக்கு கொடுப்பதாக செய்த வாக்குறுதியை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கிடையில், பிஹெச் கூட்டணியுல் அக்கட்சி இன்னும் உறுதியுடன் உள்ளது என்றும் பி.கே.ஆர் கூறியுள்ளது.
“பி.கே.ஆர் கட்சி, பாக்காத்தானை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் மக்கள் ஆணையைப் மீட்டெடுப்பதற்கான அனைத்து தரப்பினரின் முயற்சிகளையும் தொடர்ந்து திரட்டுகிறது.”
“அதே நேரத்தில், எந்த நேரத்திலும் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு பி.கே.ஆர் தயாராக தொடர்ந்து கவனம் செலுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.