செப்பாங்கில் உள்ள லாபு லஞ்சூட்டில் கண்டறியப்பட்ட கோவிட்-19 புதிய திரளையில் இதுவரை ஐந்து நேர்மறையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதன் மூல பாதிப்பு செர்டாங் மருத்துவமனையில் கடுமையான சுவாச நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து தொடங்கியதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“அவரது நான்கு குடும்ப உறுப்பினர்கள் அதாவது இரண்டு பிள்ளைகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள், கோவிட்-19க்கு சாதகமாக கண்டறியப்பட்டுள்ளனர்.”
இதுவரை 29 நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவற்றில் 25 நெருங்கிய தொடர்புகள் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிர்மறையாகவே கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
“நோய்த்தொற்றுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. ஆனால், சுற்றுலா நடவடிக்கைகளுடன் இது தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது,” என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.
மலேசியாவில் கோவிட்-19 இன் தற்போதைய நிலை குறித்து கூறுகையில், அவர் இன்று 21 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், நாட்டில் கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் மொத்தம் 8,556 என்றார்.
கோவிட்-19 நோய்த்தொற்றுடன் 289 பாதிப்புகள் செயலில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
76 பாதிப்புகள் மீட்கப்பட்டு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார். மொத்த குணமடைந்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,146 அல்லது மொத்த பாதிப்புகளில் 95.2 சதவீதமாக உள்ளது.