தேசிய கூட்டணி ஒரு வலுவான அரசாங்கம் அல்ல என்பதால், பொதுத் தேர்தலே சிறந்த வழி – இஸ்மாயில் சப்ரி

நாடாளுமன்றத்தை கலைத்து புதிய பொதுத் தேர்தலை நடத்துவதே தற்போதைய அரசியல் கொந்தளிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

தேசிய கூட்டணி (பி.என்) தற்போது ஒரு வலுவான அரசாங்கம் அல்ல என்பதை உணர்ந்த அம்னோ துணைத் தலைவர், எதிர்க்கட்சியின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் தேசிய கூட்டணி சிறிய பெரும்பான்மையின் ஆதரவைப் பெற்றுள்ளதே இதற்கு காரணம் என்றார்.

“இன்றைய அரசாங்கம் ஒரு வலுவான அரசாங்கம் அல்ல. எனவே, என்னைப் பொறுத்தவரை தற்போதைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி, மீண்டும் மக்களே முடிவை எடுக்க விட்டு விடுவதாகும்,” என்று அவர் இன்று கூறினார்.

முகிதீன் யாசினால் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டு, பேரா நாடாளுமன்ற தலைவருமான இஸ்மாயில், இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அவர்கள் அதை வெல்ல முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

மக்களின் ஆணை இல்லாமலேயே ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளதாக தேசிய கூட்டணி தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மக்களின் நலன்களை முன்வைத்து, கட்சியைப் பொருட்படுத்தாமல் நாம் ஒன்றிணைந்து செயற்படும் நேரமாக இது இருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியோ அரசியல் நடவடிக்கைகளில் அதிக அக்கறை கொண்டுள்ளது.

பதவிக்காலம் முடியும் வரை பி.என் அரசாங்கம் ஆட்சி செய்ய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார். அரசியலமைப்பின் படி 2023க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பிரதமராக முகிதீனின் நிலைப்பாடு இப்போது மக்களின் கைகளில் இல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் உள்ளது, என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

“மக்களின் கைகளில் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் இருப்பதால் பி.என் மற்றும் பாக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் அதிகமாக இல்லை. அதனால், அதைக் மக்கள் முடிவுக்கு விட்டுவிடுவதே சிறந்தது.”

“எதிர்க்கட்சியினர் (பி.எச்) தாங்களே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார்கள். நாங்களே மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறோம் என்று நாங்களும் (பி.என்) கூறுகிறோம். எனவே உண்மையில் யார் தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும், ”என்றார்.