அசார் ஹாருன் – தேர்தல் ஆணையத்திலிருந்து நாடாளுமன்ற சபாநாயகரா?

முகமட் ஆரிஃப் யூசோப் அவருக்கு பதிலாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அஜீசான் ஹாருன் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சிலாங்கூர் பாரிசான் தகவல்தொடர்பு தலைவர் இஷாம் ஜாலீல் இன்று பிரதமர் முகிதீன் யாசினுக்கு சமூக ஊடகங்களில் பகிரங்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். இஷாம் இவ்வளர்ச்சி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

“பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகராக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் ஹாருனை பிரதமர் முகிதீன் முன்மொழிந்துள்ளார் என்பதை நான் அறிந்தேன்.”

“அசார் ஹாருன் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மற்றும் பாக்காத்தான் கட்சியால் நியமிக்கப்பட்டவர் ஆவார். அவர் பாக்காத்தானின் திடமான ஆதரவாளர். இந்த செய்தி உண்மையாக இருந்தால், இது ஒரு வேடிக்கையான திட்டமாக இருக்கும்” என்று அவர் எழுதினார்.

முகிதீனும் அரசாங்கமும் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற விரும்புவதால் இந்த புதிய சபாநாயகரின் தேர்வுக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையில், சட்டத்துறை பின்னணியை கொண்ட அசார் ஹாருனை தேர்ந்தெடுப்பதில் அசாதாரணமானது எதுவும் இல்லை பாரிசான் கட்சியின் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா, கூறினார்.

“இது ஒரு சாதாரண செயல்முறை, ஆனால் ஒரு எளிய பெரும்பான்மையைப் பெற்ற பின்னர் சபை கூடும் போது இந்த நியமனம் நடைபெறும்” என்று கோலாலம்பூரில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

மனித உரிமை வழக்கறிஞர் என்றும் அழைக்கப்படும் அசார் நேற்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியதாக செய்தி வெளியிடப்பட்டது.

ஜூன் 26 அன்று, சபாநாயகர் மற்றும் அவரது துணை சபாநாயகர் ஙா கோர் மிங்கை நீக்க முகிதீன் ஒரு பிரேரணையை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஜூலை 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமர்வில் அதை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.