பெர்சத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் 27 அன்று நடைபெறுகிறது

கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட பின்னர், முகிதீன் யாசின் தலைமையில் செப்டம்பர் 27 அன்று பெர்சத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) நடைபெறவுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் இன்று இந்த தேதியை அறிவித்தார். பெர்சத்துவின் சர்ச்சைக்குரிய தலைவர் டாக்டர் மகாதீர் முகமட், அதன் பொதுச்செயலாளர் மர்சுகி யஹாயா மற்றும் நான்கு உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், அதன் தொகுதி மாநாடு ஆகஸ்ட் 22 ஆம் தேதியும், இளைஞர் மாநாடு (அர்மாடா) ஆகஸ்ட் 15 ஆம் தேதியும், மகளிர் மாநாடு (ஸ்ரீகண்டி) ஆகஸ்ட் 16 ஆம் தேதியும் தொடங்கும்.

இந்த மாத தொடக்கத்தில் மகாதீர், மர்சுகி யஹ்யா, முக்ரிஸ் மகாதிர், சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான், மஸ்லி மாலிக், மற்றும் அமிருதீன் ஹம்சா ஆகியோர் பெர்சாத்து கட்சியின் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அதன்படி, அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர்கள் பெர்சாத்து கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக நீடிக்க கோரி இடைக்கால உத்தரவுக்கான ஒரு விண்ணப்பத்தையும் தாக்கல் செய்தனர். இருப்பினும் ஜூன் 18 ஆம் தேதி நீதிபதி ரொஹானி இஸ்மாயில் இந்த இடைக்கால உத்தரவுக்கான விண்ணப்பத்தை நிராகரித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமராக இருக்கும் முகிதீனும், மேலும் பல பெர்சத்து தலைவர்களும் அவ்வழக்கை ஒதுக்கி வைக்க விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர்.