‘கொண்சோட்டியம்’ பேருந்து ஓட்டுநர்கள் மறியல்

மூன்று மாதங்களாக, ஊதியம் வழங்காத ‘கொண்சோட்டியம்’ பேருந்து நிறுவனத்தின் மீது, தீபகற்ப ‘கொண்சோட்டியம்’ விரைவு பேருந்து தொழிலாளர்கள் செயற்குழு (JKPKBES Taiping) நேற்று, ஈப்போ மனிதவள இலாகாவில் புகார் ஒன்றினை செய்துள்ளது.

பேருந்து ஓட்டுநர்களுக்கும் இன்னும் பிற ஊழியர்களுக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் , ஊதியத்தையும் சிறப்பு நிதி உதவிக்கான பணத்தையும் வழங்காமல், அவர்களுக்கு இக்காலக்கட்டத்தில் ரிம 300 மட்டுமே வழங்கியிருக்கிறது.

இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள், தங்கள் எதிர்ப்பைக் காட்ட இன்று வீதியில் பதாகை ஏந்தி போராட்டத்தில் இறங்கினர்.  தொழிலாளர்களின் இந்தப் பிரச்னையை மனித வள அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, அவர்களுக்கு ஆதரவாக மலேசிய சோசலிசக் கட்சியைச் (பிஎஸ்எம்) சேர்ந்த கார்த்திகேசு மற்றும் ஷஸ்னி பாய் இருவரும்  செயல்பட்டனர்.

இந்த மறியலில் தொழிலாளர் குழுவில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அந்நிறுவனத்தின் பேருந்து ஊழியர்கள்  ஈடுபட்டனர். மார்ச் மாதம் தொடக்கம், அத்தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை.

சில ஊழியர்கள், ‘கொண்சோட்டியம்’ நிறுவன முதலாளியைத் தனித்தனியாகவும் JKPKBES மூலமாகவும் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், பதில் திருப்திகரமாக இல்லாததோடு; அவர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படாத நிலையில், அவர்கள் பி.எஸ்.எம்.-ஐ அணுகியுள்ளனர்.

ஊதிய நிலுவைத் தவிர, தொழிலாளர்களுக்கு மத்திய அரசு வழங்கிய  ஊதிய மானிய திட்டப்பணத்தையும் அந்நிறுவனம் இன்னும் அவர்களுக்கு வழங்கவில்லை. மேலும், சேமநிதியும் நீண்ட நாட்களுக்குச் செலுத்தப்படாமல் இருப்பதையும் அவர்கள் அமைச்சின் பார்வைக்குக் கொண்டு சென்றனர்.

நன்றி : சோசலிஸ்தமிழ்மலேசியா.புளோக்ஸ்போட்.கோம்