மலேசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (எம்.பி.சி)/Perbadanan Produktiviti Malaysia (MPC) தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சியின் துணைத் தலைவர் தியான் சுவாவுக்கு பி.கே.ஆர் மத்திய தலைமைக் குழு கட்டளை விடுத்துள்ளது.
“ஆம், தியான் சுவா கலந்து கொண்ட கடைசி மத்திய தலைமைக் குழு கூட்டத்தின் முடிவின்படி நான் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளேன்” என்று பி.கே.ஆர் பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுஷன் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அந்த கடிதத்தின்படி, தியான் சுவா மலேசிய உற்பத்தித்திறன் கழகத்தின் (எம்.பி.சி) தலைவர் பதவியிலிருந்து விலக உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், இல்லையேல் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் .
இருப்பினும், அவரை பதவி விலகக் கூறும் அத்தகைய கடிதம் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் அந்த பதவி குறித்து பேசி விட்டதாகவும் தியான் சுவா தெரிவித்தார்.
பிப்ரவரி பிற்பகுதியில் “ஷெராடன் நகர்வை” அடுத்து, அஸ்மின் அலிக்கு ஆதராவக இருந்தவர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று விசாரணைகளைத் தொடங்கியது.
கட்சியை தூய்மைப்படுத்துதலில் நூற்றுக்கணக்கான பி.கே.ஆர் உறுப்பினர்கள் இடைநீக்கம் அல்லது தங்கள் பதவிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதில் தப்பிய ஐந்து பேரில் தியான் சுவாவும் அடங்குவார். அவர்களுக்கு எதிராக எச்சரிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 23 இரவு, அஸ்மின் அலி குழுவினர் ஷெரட்டன் ஹோட்டலில் அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தது அரசாங்கத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக இருந்தது.