சிகாமட் நாடாளுமன்றத் தொகுதி என்ன உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா!?

சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியைத் தான் விரும்பிய ஒருவருக்குத் தாரைவார்த்து கொடுக்க, அத்தொகுதி என்ன அவர் பாட்டன் வீட்டு சொத்தா என ஜசெக சீனாய் கிளைத் தலைவர் சந்திரசேகரன், சிகாமாட் எம்பி எட்மண்ட் சந்தாராவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் தமிழ் பத்திரிக்கை ஒன்றில், எதிர்வரும் 15-வது பொதுத்தேர்தலில், மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரனுக்கு, சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாகக் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான எட்மண்ட் சந்தாரா அறிக்கை விடுத்துள்ளது தொடர்பில் சந்திரசேகரன் இந்தப் பத்திரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

“கடந்த 14-வது பொதுத் தேர்தலில், சிகாமட் நாடாளுமன்ற தொகுதியில் பி.கே.ஆர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்மண்ட்னின் இந்த அறிக்கை ஒரு சிறு பிள்ளை தனமானது.

“ஒரு தொழில் அதிபரும் கல்விமானுமாகிய எட்மண்ட், அரசியலில் தான் இன்னும் ஒரு கத்துக்குட்டிதான் என்பதை இங்கே மறுஉறுதி படுத்தியுள்ளார்,” என சந்திரசேகரன் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 14-வது பொதுத்தேர்லில், அவருக்கென்று ஒரு கட்சி இருந்தது, அதன்வழி வெற்றி அடைந்து, பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.”

“ஆனால் இன்று, அவருக்கென ஒரு கட்சியும் கிடையாது அடையாளமும் கிடையாது. பிறகு எந்த அடிப்படையில், வேறு ஒருவருக்காக இவர் சிகாமாட் தொகுதியைச் சிபாரிசு செய்கிறார் என்பது வேடிக்கையாக உள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 15-வது பொதுத்தேர்தலில், எட்மண்ட் சந்தாரா சிகாமட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும். அவரை அத்தொகுதி மக்கள் மீண்டும் ஏற்கிறார்களா என்பதை நிரூபித்து காட்டட்டும். அப்போது தெரிந்துவிடும் அவரின் தலை எழுத்து, பிறகு முடிவு செய்வோம் சிகாமட் நாடாளுமன்ற தொகுதி அவருக்கா அல்லது அவர் அண்ணணுக்கா என்று,” என சந்திரசேகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.