முகிலரசுவின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை பெறப்படும் – வழக்கறிஞர்

நேற்று இரவு சுங்கை பூலோ சிறையில் இறந்த வி.முகிலரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முகிலரசுவின் உடலும் பிரேத பரிசோதனை அறிக்கையும் அவரின் குடும்பத்தினரிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஏ.சீலன் கூறினார்.

முகிலரசுவின் உடலைப் பார்க்க அவரின் சகோதரர் வி. கருணாகரன் பிள்ளைக்கு இன்று பிற்பகல் அனுமதி வழங்கப்பட்டதாக மலேசியாகினியிடம் பேசிய சீலன் கூறினார்.

“முகத்தில் வீக்கம் இருந்தது. இருப்பினும், அவரது கருமையான சருமத்தின் காரணமாக, காயங்களை (ஏதேனும் இருந்தால்) பார்க்க அறுவைசிகிச்சை செய்து தோலை உரித்தெடுக்க வேண்டும் என்று தடயவியல் நிபுணர் கூறினார்கள்.”

“அவரின் வாயில் கூட பற்களில் காய்ந்துபோன இரத்தத்தின் தடயங்களைக் காண முடிந்தது. இடது கன்னம், புருவம், மற்றும் நெற்றியும் வீங்கியிருந்தன.”

மாலையில் நெஞ்சு வலியால் கீழே விழுந்து பின் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக தெரிந்த போதும், நேற்று இரவு 11 மணிக்குப் பிறகே அவரது மரணம் குறித்து முகிலரசுவின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதாக சீலன் தெரிவித்தனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் தனது சகோதரருடனான தொலைபேசி அழைப்பின் போது பேசிக் கொண்டிருந்த முகிலரசு, நகைச்சுவை உணர்வுடன் நல்ல நிலையில் இருந்ததாக அவர் கூறினார்.

தனது சகோதரரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்து கருணாகரன் இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை புலோ மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மருத்துவ தடயவியல் குழு அங்குள்ள மருத்துவ பணியாளர்களைச் சந்திக்க சுங்கை புலோ சிறைச்சாலைக்குச் சென்றதாகவும், இறந்தவரின் சிறை, மற்றும் கீழே விழுந்ததாகக் கூறப்படும் இடத்தையும் பார்வையிட்டு புகைப்படம் எடுத்ததாகவும் அவருக்கு தகவல் கிடைத்ததாக சீலன் கூறினார்.

எந்தவொரு தரப்பினருக்கும் சாதகமாக இல்லாமல் பிரேத பரிசோதனை நியாயமாக செய்யப்படும் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மரணத்திற்கான உண்மையான காரணத்தை தீர்மானிக்க சிறப்பு விசாரணை நடத்துவது உட்பட அடுத்த நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் கலந்துரையாடுவதாகவும் சீலன் தெரிவித்தார்.

போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39பி இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முகிலரசு, 35, 2019 மார்ச் முதல் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.